Published : 09 Mar 2025 04:27 AM
Last Updated : 09 Mar 2025 04:27 AM

பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.2,500 வழங்க டெல்லி அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 48 இடங்களில் பாஜக வெற்றி பெற்று சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சியமைத்துள்ளது. இந்நிலையில், டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,100 உதவித்தொகை வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்த நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி நிச்சயமாக நிறைவேற்றப்படும் என பாஜக மேலிடம் உறுதியளித்தது.

இந்நிலையில், சர்வதேச மகளிர் தினமான நேற்று, டெல்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையில் டெல்லி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கும், 'மகிளா சம்ரித்தி யோஜனா' திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.5,100 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது: இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.5,100 கோடியை டெல்லி அரசு ஒதுக்கியுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தின் பயனாளிளைக் கண்டறிவதற்காக எனது தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் திட்டத்துக்கான பயனாளிகள் தங்களது பெயர்களைப் பதிவு செய்வதற்கான பணிகள் தொடங்கும். இதற்காக விரைவில் ஓர் இணையதளமும் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து டெல்லி அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா கூறும்போது, “மகளிர் உதவித்தொகைத் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். தற்போது அமைச்சர்கள் கபில் மிஸ்ரா, ஆசிஷ் சூட், பர்வேஷ் வர்மா ஆகியோர் அடங்கிய 3 பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x