

புதுடெல்லி: மகளிர் தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடியின் சமூக ஊடக கணக்குகளை, தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி உட்பட 6 சாதனை பெண்கள் நேற்று இயக்கினர்.
கடந்த 23-ம் தேதி மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சர்வதேச மகளிர் தினத்தில் என்னுடைய சமூக ஊடக கணக்குகளை பெண்களுக்காக அர்ப்பணிப்பேன். பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் தங்களுடைய அனுபவங்களை எனது சமூக ஊடக கணக்குகள் மூலம் மக்களோடு பகிர்ந்து கொள்வார்கள்" என்று தெரிவித்தார்.
இதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளில் 6 சாதனை பெண்கள் நேற்று தங்களது பதிவுகளை வெளியிட்டனர்.
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து பதிவில், "மகளிர் தினத்தில் பெண் சக்திக்கு தலைவணங்குகிறேன். பெண்களை முன்னேற்ற மத்திய அரசு அயராது பாடுபடுகிறது. பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நான் ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி இன்றைய தினம் எனது சமூக வலைதள கணக்குகளை பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் கையாள்கின்றனர்" என்று தெரிவித்தார்.
செஸ் வீராங்கனை வைஷாலி: தமிழக தலைநகர் சென்னையை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடியின் சமூக ஊடக கணக்குகளில் பதிவுகளை வெளியிடுவது சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருக்கிறது. நான் 6 வயது முதல் செஸ் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறேன். இந்த நேரத்தில் அனைத்து பெண்களுக்கும் ஓர் அறிவுரையை கூற விரும்புகிறேன். உங்கள் கனவுகளை பின்தொடர்ந்து செல்லுங்கள். தடைகளை தகர்த்து முன்னேறி செல்லுங்கள். என் வாழ்க்கையில் எனது தந்தை ரமேஷ் பாபு, தாய் நாகலட்சுமி, தம்பி பிரக்ஞானந்தா எனக்கு உறுதுணையாக உள்ளனர். சிறந்த பயிற்சியாளர்கள், சிறந்த அணி வீரர்கள் கிடைத்திருப்பது எனது அதிர்ஷ்டம்.
பெண்களுக்கு ஆதரவு அளியுங்கள். அவரது திறமைகள் மீது நம்பிக்கை வையுங்கள். அவர்கள் பல்வேறு சாதனைகளை படைப்பார்கள். என்னைப் பொறுத்த வரை தரவரிசை பட்டியலில் மேலும் முன்னேற வேண்டும். எனது தாய்நாட்டை பெருமை அடைய செய்ய வேண்டும். விளையாட்டில் விருப்பம் உள்ள மாணவிகள், நீங்கள் விரும்பும் விளையாட்டை தேர்ந்தெடுத்து அதில் உங்கள் திறமைகளை நிரூபியுங்கள். இவ்வாறு வைஷாலி தெரிவித்துள்ளார்.
எலினா மிஸ்ரா, ஷில்பி சோனி: ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தை சேர்ந்த அணு விஞ்ஞானி (பிஏஆர்சி) எலினா மிஸ்ரா, மத்திய பிரதேசத்தின் சாகர் பகுதியை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி ஷில்பி சோனி (இஸ்ரோ) ஆகியோர் இணைந்து வெளியிட்ட பதிவில், “அறிவியல், தொழில்நுட்ப உலகத்துக்கு எல்லையே கிடையாது. இந்திய அணு சக்தி துறை, விண்வெளி துறையில் எங்களை போன்ற பல்வேறு பெண் விஞ்ஞானிகள் பணியாற்றுகின்றனர். நாங்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறோம். எந்த துறையாக இருந்தாலும் பெண்கள் சாதனை படைக்கலாம்" என்று தெரிவித்துள்ளனர்.
அனிதா தேவி: பிஹாரின் நாளந்தா மாவட்டம், ஆனந்தபூர் கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் அனிதா தேவி வெளியிட்ட பதிவில், “கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த நிறுவனத்தை தொடங்கினேன். பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும். நாட்டுக்கும், வீட்டுக்கும் சேவையாற்ற வேண்டும். அர்ப்பணிப்பு, கடின உழைப்பு இருந்தால் எந்த துறையிலும் பெண்களால் முன்னேற முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
அஜைதா ஷா: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்த தொழிலதிபர் அஜைதா ஷா வெளியிட்ட பதிவில், “ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் கிராமங்களில் பெண்களை தொழிலதிபர்களாக மாற்றி வருகிறேன். வேளாண்மை, சுகாதாரம், நுகர்வோர் பொருட்கள் என அனைத்து துறைகளிலும் நாங்கள் கால் பதித்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
அஞ்சலி அகர்வால்: டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சமர்த்யம் என்ற அமைப்பின் தலைவர் அஞ்சலி அகர்வால் வெளியிட்ட பதிவில், “நான் மாற்றுத் திறனாளி. இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறேன். அவர்கள் விளையாட்டு, வர்த்தகம், கல்வியில் முன்னேற வழிகாட்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.