Published : 09 Mar 2025 04:12 AM
Last Updated : 09 Mar 2025 04:12 AM
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஹம்பியில் நேற்று முன் தினம் நள்ளிரவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி உட்பட 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். அவர்களுடன் இருந்த ஆண் சுற்றுலா பயணி சனாப்பூர் கால்வாயில் தள்ளி கொல்லப்பட்டார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி உலக புகழ்ப்பெற்ற சுற்றுலா தலம் ஆகும். இங்கு தங்கும் விடுதி நடத்திவரும் பங்கஜ் பாட்டீல் (42), தனது விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகளான அமெரிக்காவை சேர்ந்த டேனியல் ஜேம்ஸ் (23), ஒடிஸாவை சேர்ந்த பிபாஷ் குமார் (27), சுற்றுலா வழிகாட்டியான 28 வயதான பெண், இஸ்ரேலை சேர்ந்த 27 வயதான பெண் ஆகியோருடன் நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் சனாப்பூர் கால்வாய் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
உள்ளூர் இளைஞர்கள் அட்டகாசம்: அப்போது அங்கு வந்த உள்ளூர் இளைஞர்கள் 3 பேர் அவர்களிடம், 'பெட்ரோல் இருக்கிறதா? இல்லையென்றால், ரூ.100 கொடுங்கள்' என கன்னடத்தில் கேட்டுள்ளனர். அதற்கு பங்கஜ் பாட்டீல், 'இல்லை' என பதிலளித்துள்ளார். இதனால் கோபமடைந்த இளைஞர்கள், சுற்றுலா பயணிகளிடம் இருந்த கிடாரை பிடுங்கிக்கொண்டு, ''பணம் தராவிட்டால் அதனை கால்வாயில் போட்டுவிடுவோம்'' என மிரட்டியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த இளைஞர்கள் 3 ஆண்களையும் கற்களால் தாக்கி, கால்வாயில் பிடித்து தள்ளி விட்டனர். இஸ்ரேலை சேர்ந்த 27 வயது பெண்ணையும், சுற்றுலா வழிகாட்டியான 28 வயதான பெண்ணையும் மலையடிவாரத்துக்கு இழுத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த 3 செல்போன்கள், ரூ.9,500 ரொக்கம், 1 லேப்டாப் ஆகியவற்றையும் பறித்து சென்றுள்ளனர்.
கால்வாயில் இருந்து தப்பித்த பங்கஜ் பாட்டீல், அமெரிக்காவை சேர்ந்த டேனியல் ஜேம்ஸை சிரமப்பட்டு காப்பாற்றியுள்ளார். ஒடிஸாவை சேர்ந்த பிபாஷ் குமார் நீரில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து பங்கஜ் பாட்டீல் கங்காவதி போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.
அங்கு வந்த போலீஸார் பாதிக்கப்பட்ட 2 பெண்களையும், 2 ஆண்களையும் மீட்டு கொப்பல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சனாப்பூர் கால்வாயில் 6 மணி நேரம் தேடியதை தொடர்ந்து, பிபாஷ் குமார் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொப்பல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
2 பேர் கைது: இதனிடையே கொப்பல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராம் எல் அரசித்தி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இந்த சம்பவம் குறித்து விடுதி உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் பாலியல் வன்கொடுமை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 2 பெண்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த 2 ஆண்களும் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கங்காவதியை சேர்ந்த சாய் மல்லு (27), சேத்தன் சாய் (26) ஆகிய 2 பேரை கைது செய்திருக்கிறோம். தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்துள்ளோம்'' என்றார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT