

மணிப்பூரில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு பொது போக்குவரத்து நேற்று தொடங்கியது. இதில் சில இடங்களில் போராட்டக்காரர்கள் - பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது.
மணிப்பூரில் நில உரிமைகள், அரசியல் பிரதிநித்துவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மைதேயி - குகி சமூகத்தினர் இடையே கடந்த 2023, மே முதல், மோதல் மற்றும் வன்முறை நிலவுகிறது.
இதன் காரணமாக முதல்வர் பிரேன் சிங் கடந்த மாதம் பதவி விலகினார். அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மணிப்பூர் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக உயர்நிலை ஆலோசனை கூட்டம் கடந்த 1-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில் மணிப்பூரில் மார்ச் 8 முதல் தடையற்ற பொது போக்குவரத்தை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார்.
இந்நிலையில் மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பேருந்து சேவை தொடங்கியது. மணிப்பூரில் இருந்து தங்களுக்கு தனி நிர்வாகம் ஏற்படுத்தும் வரை பொது போக்குவரத்தை அனுமதிக்க முடியாது குகி சமூகத்தினர் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் அவர்கள் பல இடங்களில் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.
இந்த தடைகள் அகற்றப்பட்டு பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன.
குகி சமூகத்தின் பெரும்பான்மைபான வசிக்கும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினருடன் நேற்று மோதல் ஏற்பட்டது. சாலையை தோண்டி வைத்தும் டயர்களை எரித்தும் வாகனங்கள் மீது கற்களை வீசியும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி விரட்டினர்.