“பாஜகவுக்காக வேலை செய்யும் காங்கிரஸ் நிர்வாகிகளை களையெடுக்க வேண்டும்” - ராகுல் காந்தி

“பாஜகவுக்காக வேலை செய்யும் காங்கிரஸ் நிர்வாகிகளை களையெடுக்க வேண்டும்” - ராகுல் காந்தி
Updated on
1 min read

அகமதாபாத்: “பாஜகவுக்காக வேலை செய்யும் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகளை முதலில் அடையாளம் கண்டு களையெடுக்க வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள்கள் பயணமாக குஜராத் சென்றுள்ள ராகுல் காந்தி, இரண்டாவது நாளான இன்று அகமதாபாத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினர். அப்போது பேசிய அவர், "குஜராத் காங்கிரஸில் இரண்டு விதமான தலைவர்களும், நிர்வாகிகளும் உள்ளனர். ஒரு பிரிவினர் மக்களுக்கு நேர்மையாக இருப்பவர்கள், அவர்களுக்காக போராடுபவர்கள், அவர்களை மதிக்கிறவர்கள், காங்கிரஸ் சித்தாந்தத்தை மனதில் வைத்திருப்பவர்கள். மற்றொரு வகையினர், மக்களை மதிக்காமல், அவர்களிடமிருந்து விலகி இருப்பவர்கள். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பாஜகவுக்காக வேலை செய்பவர்கள். அவர்கள் களையப்பட வேண்டும்.

நாம் நமது பொறுப்புகளை நிறைவேற்றாத வரை குஜராத் மக்கள் நம்மை தேர்தலில் வெற்றி பெறச் செய்யமாட்டார்கள். நமது பொறுப்புகளை நாம் நிறைவேற்றாத வரை எங்களைத் தேர்தலில் வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கேட்கவும் முடியாது. பொறுப்புகளை நாம் நிறைவேற்றும் நாளில், குஜராத் மக்கள் காங்கிரஸை ஆதரிப்பார்கள் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

குஜராத்தின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் சிறு வணிகர்கள், சிறு - குறு தொழில்முனைவோர்களே. அவர்கள் இன்றும் துன்பத்தில் உள்ளனர். புதிய தொலைநோக்குப் பார்வை வேண்டும் என விவசாயிகள் குரல் கொடுக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியால் அந்த தொலைநோக்குப் பார்வையை வழங்க முடியும். ஆனால் அதற்கு முன்பாக நாம் நமது கட்சியை வலுப்படுத்த வேண்டும்.

குஜராத்தில் எதிர்க்கட்சிகளுக்கு 40 சதவீத வாக்குகள் உள்ளன. வெற்றி பெறுவதற்கு நாம் இன்னும் 5 சதவீதம் மட்டுமே அதிகரிக்க வேண்டும். தெலங்கானாவில் நாம் 22 சதவீதம் வாக்குகளை அதிகரித்துள்ளோம். அதனை நாம் இங்கேயும் செய்ய முடியும். அதற்கு முன்பு கட்சிக்குள் களையெடுக்கப்பட வேண்டும்" என்று ராகுல் காந்தி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in