Published : 08 Mar 2025 03:10 PM
Last Updated : 08 Mar 2025 03:10 PM
புதுடெல்லி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள ஆயிரக்கணக்கான பெண்கள், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான ரூ.2,500 உதவித் தொகைக்காக காத்திருக்கிறார்கள் என்று பாஜக அரசை ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அதிஷி சாடியுள்ளார்.
டெல்லி எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின் போது, மார்ச் 8-ம் தேதிக்குள் டெல்லியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள். இன்று டெல்லியில் உள்ள அனைத்து பெண்களும், தங்களுடைய வங்கிக் கணக்கில் ரூ.2,500 டெபாசிட் செய்யப்பட்டுள்ளதா என்று தங்களுடைய மொபைல் போன்களைப் பார்த்த வண்ணம் காத்திருக்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பின்பு ஆட்சியை பிடிக்க வழிவகுத்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, டெல்லி பெண்கள் அனைவருக்கும் நிதி உதவி அளிக்கும் மகிளா சம்ரிதி யோஜனா திட்டம் அமல்படுத்தப்படும் என்பதை முக்கிய வாக்குறுதியாக அளித்திருந்தனர். ஆனால் இன்று வரை அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அதிரகாரபூர்வமான அறிவிப்புகள் வெளியாகவில்லை.
என்றாலும் இந்தத் திட்டம் குறித்து விவாதிக்க முதல்வர் ரேகா குப்தா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. திட்டம் நிறைவேற்றப்படுவது குறித்து இன்று மாலையில் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பாஜக நிர்வாகிகள் கூறுகையில், “மகிளா சமிர்தி யோஜனாவுக்கு ஒப்புதல் அளிக்க அமைச்சரவைத் தயாராக இருக்கிறது. திட்டத்துக்கான தகுதிகளை நிர்ணயிப்பது உள்ளிட்டகளை சரிசெய்யப்பட்டு வருகின்றன.” என்றனர்.
திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன், அது துணைநிலை ஆளுநரின் இறுதி ஒப்புதலுக்காக அனுப்பப்படும், அதன்பின்பு அரசிதழில் வெளியிட்டப்படும்.
மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்துக்கு ஒப்புதல்: இதனிடையே டெல்லியில் நடந்த ‘மகளிர் தின திட்டம்’ (Mahila Divas Program) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, "டெல்லியில் மகிளா சம்ரிதி யோஜனாவுக்காகவும், அந்த திட்டத்துக்கு ரூ.5100 கோடி ஒதுக்கீடு செய்துள்ள டெல்லி முதல்வர் ரேகா குப்தா, மற்றவர்களை நான் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்தார். மேலும் மகிளா சம்ரிதி யோஜனாவு்க்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
டெல்லி பட்ஜெட்: டெல்லியில் தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட் குறித்து உயர்மட்ட கூட்டம் வெள்ளிக்கிழமை முதல்வர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், டெல்லி சுற்றுச்சூழல் மற்றும் தொழில் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சாவும் கலந்து கொண்டார். முன்னதாக டெல்லி முதல்வர், பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 24-ம் தேதி தொடங்கும். மார்ச் 24 - 26 வரை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.” என்று தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT