Published : 08 Mar 2025 05:16 AM
Last Updated : 08 Mar 2025 05:16 AM
தங்க கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ரன்யா ராவ் 45 நாடுகளுக்கு பயணித்ததும், அதில் துபாய்க்கு மட்டும் 27 முறை சென்று வந்ததும் வருவாய் புலனாய்வு இயக்குநரக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ் (32) தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த 'வாகா' திரைப்படத்தில் நடித்தார். கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான இவர், கடந்த 3-ம் தேதி துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்தார். அவரிடம் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவர் உடையில் மறைத்து எடுத்து வந்த 14.8 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து பெங்களூருவில் ரன்யா ராவின் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கம், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ.17 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியதாவது: ரன்யா ராவின் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை ஆராய்ந்ததில் அவர் இதுவரை 45 நாடுகளுக்கு பயணித்தது தெரியவந்துள்ளது. இதில் துபாய்க்கு மட்டும் அவர் 27 முறை சென்றுள்ளார். அங்கு தொழில் செய்வதால் அடிக்கடி சென்று வந்ததாக விசாரணையின்போது கூறினார்.
துபாய்க்கு கடந்த ஓராண்டில் மட்டும் 22 முறையும், குறிப்பாக கடந்த 15 நாட்களில் 4 முறையும் அவர் சென்று வந்துள்ளார். அங்கிருந்து தங்கத்தை கடத்தி வருவதற்காகவே லெதர் ஜாக்கெட், பிரத்யேக பை, பெல்ட் ஆகியவற்றை வடிவமைத்துள்ளார். ஒவ்வொரு முறை வரும்போதும் இதே உடையை அணிந்துவந்து, அதில் தங்கத்தை மறைத்து கொண்டுவந்துள்ளார்.
ரன்யா ராவுக்கு முக்கிய பிரமுகர்கள் சிலருடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூருவில் உள்ள பெரிய நகைக் கடைகளுடனும் அவருக்கு தொடர்பு இருக்கிறது. அந்த கடைக்காக அண்மையில் தங்கத்தை கடத்தி வந்துள்ளார். ஒரு கிலோ தங்கத்துக்கு ரூ.1 லட்சம் கமிஷன் பெற்றுள்ளார். அந்த வகையில் ஒருமுறை துபாய் சென்று வந்தால் ரன்யா ராவ் ரூ.12 முதல் ரூ.15 லட்சம் வரை கமிஷனாக சம்பாதித்துள்ளார்.
காப்பாற்றிய அதிகாரிகள்: ரன்யா ராவ் இந்த கடத்தலுக்கு தனது வளர்ப்பு தந்தையும் போலீஸ் டிஜிபியுமான ராமசந்திர ராவின் பெயரை பயன்படுத்தியுள்ளார். இதன்மூலம் பெங்களூரு விமான நிலையத்தில் சோதனைக்கு செல்லாமல் ஒவ்வொரு முறையும் தப்பியுள்ளார். முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் சிலர், பாதுகாப்பு பணியில் இருந்தவர்களுக்கு அழுத்தம் கொடுத்து அவர் விஐபிகள் பாதையில் செல்ல உதவியுள்ளனர். அவரை மேலும் விசாரித்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம். இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
கவனிக்கும் அமலாக்கத்துறை: ரன்யா ராவ் மீதான இவ்வழக்கில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானதால் கர்நாடக அரசில் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் இவ்வழக்கை கவனிக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வழக்கில் துபாயில் உள்ள தொழிலதிபர்களுக்கும், இந்தியாவில் உள்ள முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT