இந்தியாவிடம் ஒப்படைப்பதை எதிர்த்து தீவிரவாதி தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

இந்தியாவிடம் ஒப்படைப்பதை எதிர்த்து தீவிரவாதி தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனு நிராகரிப்பு
Updated on
1 min read

இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிராக, மும்பை தாக்குதல் தீவிரவாதி தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

மும்பை தீவிரவாத தாக்குதலில் அமெரிக்க குடியுரிமை பெற்ற பாகிஸ்தானியர் தஹாவூர் ராணாவுக்கு (64) தொடர்ப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் லஷ்கர் -இ-தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லியுடன் இணைந்து மும்பை தாக்குதலில் சதி செய்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் இருக்கும் இவரை, விசாரணைக்காக ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்காவிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்திருந்தது.

பிரதமர் மோடி சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தபோது, இந்தியாவின் நீண்டநாள் கோரிக்கை குறித்து அதிபர் ட்ரம்பிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தஹாவூர் ரானாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அதிபர் ட்ரம்ப் அனுமதி வழங்கினார். மிக கொடிய தீவிரவாத குற்றச்சாட்டில் சிக்கியவர், இந்தியாவில் விசாரணையை சந்திக்க வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்தார்.

இதையடுத்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தஹாவூர் ராணா ஒரு அவசர மனுவை தாக்கல் செய்தார். அதில், அவர் தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தினால், பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம் என்பதற்காக கொடுமைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. தன்னை நாடு கடத்துவது அமெரிக்க மற்றும் ஐ.நா சட்டங்களுக்கு எதிரானது’’ என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இந்த மனுவை நிராகரிப்பதாக அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ககன் நேற்று முன்தினம் கூறினார். இதன் மூலம் தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது உறுதியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in