‘காடுகளில் அழியும் நக்சலிஸம் நகர்ப்புறங்களில் வேரூன்றுகிறது’ - பிரதமர் மோடி

பிரதமர் மோடி | கோப்புப்படம்
பிரதமர் மோடி | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: “காடுகளில் நக்சலிஸம் அழிந்துவிட்டது. என்றாலும் சில அரசியல் கட்சிகள் அந்த சித்தாந்தத்தை எதிரொலிப்பதால் நகர்ப்புறங்களில் அது வேகமாக வேரூன்றி வருகிறது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி வியாழக்கிழமை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "இந்தியா இன்று பெரிய அளவில் சிந்திக்கிறது, பெரிய இலக்குகளை நிர்ணயித்துக் கொள்கிறது. பெரிய அளவிலான முடிவுகளை வெளிப்படுத்துகிறது. நாட்டின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவு இது. நாடு பெரிய அளவிலான விருப்பங்களுடன் முன்னேறி வருகிறது.

பாதுகாப்பு துறையில் அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது. தீவிரவாத தாக்குதல் மற்றும் தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல்கள் பற்றியவை தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவது குறைந்து விட்டது. நாட்டில் நக்சலிஸம் அதன் இறுதி கட்டத்தில் உள்ளது. கடந்த ஆண்டுகளில் 100 மாவட்டங்கள் நக்சல் தீவிரவாத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை இரண்டு டஜனாக குறைக்கப்பட்டுள்ளது.

தீர்க்கமான நடவடிக்கைகளால் காடுகளில் நக்சலிஸம் அழிக்கப்பட்டு வரும் அதே வேளையில், அதன் வேர்களை நகர்ப்புறங்களில் ஊன்றச்செய்து புதிய சவால்களை முன்வைக்கிறது.

நகர்ப்புற நக்சலிஸம் அதன் வலையை வேகமாக வீசி வருவதால், அன்று நக்சலிஸத்தை எதிர்த்த ஒரு கட்சி, காந்தியின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு மக்களிடம் அதன் துடிப்புடன் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி, இன்று நக்சஸல்களின் கொள்கைகளை எதிரொலிக்கின்றன.

நகர்ப்புற நக்சல்கள் தங்களை அந்த கட்சியுடன் அவர்களை பொருத்திக் கொள்கின்றனர். இன்று நாம் அந்த அரசியல் கட்சிகள் வழியாக நகர்ப்புற நக்சல்களின் குரல்களை நாம் கேட்கலாம். அவர்களின் வேர்கள் எவ்வளவு ஆழமாக சென்றுள்ளது என்று நாம் உணரலாம். இந்த நகர்ப்புற நக்சல்கள் நமது முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் எதிர்க்கின்றனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

வளர்ந்த இந்தியாவுக்கு வளர்ச்சியும் பாரம்பரியத்தை பாதுகாப்பதும் முக்கியமானதாகும். நகர்ப்புற நக்சல்களுக்கு எதிராக நாம் போராட வேண்டும்.

காங்கிரஸ் கட்சி மக்களின் எதிர்பார்ப்புகளை நசுக்கி விட்டது. அதனால் அக்கட்சியிடம் எதிர்பார்ப்பதை மக்கள் நிறுத்தி விட்டனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் எதிர்பார்க்கத்தொடங்கியுள்ளனர்.

இந்தியா மூழ்கிவிடும், உலகமே அதளபாதாளத்தில் விழுந்துவிடும் என்ற ஒரேமாதிரியான சிந்தனையில் இருந்த நாடு வெளியே வந்து விட்டது. இன்று இந்தியாவின் சாதனைகளும், முன்னேற்றங்களும் உலகுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக முன்னேறியுள்ளது. விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உயரும்.

பொம்மை முதல் ஆயுத உற்பத்தி வரை இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. அதேபோல் இறக்குமதியாளர் என்ற நிலையில் இருந்தது ஏற்றுமதியாளராக மாறியுள்ளது.” இவ்வாறு பிரதமர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in