Published : 07 Mar 2025 02:19 AM
Last Updated : 07 Mar 2025 02:19 AM
திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த 1983-ம் ஆண்டு முதல், அப்போதைய முதல்வர் என்.டி.ராமாராவின் ஆலோசனையின் பேரில் திருமலையில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணத்தை அரசு வங்கிகளில் டெபாசிட் செய்து, அதில் வரும் வட்டியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறது. முதலில் தினமும் 2,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தற்போது ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தினமும் ரூ.44 லட்சம் செலவிடுகிறது. இந்த அன்னதானத்தை பக்தர்களும் ஏற்று நடத்தலாம். நாள் ஒன்றுக்கு காலை சிற்றுண்டிக்கு ரூ.10 லட்சம், மதியம் மற்றும் இரவு சாப்பாட்டுக்கு தலா ரூ.17 லட்சம் என கட்டணம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நன்கொடையாக வழங்கும் பக்தர்களின் பெயர்கள் அன்றைய தினம் டிஜிட்டல் பலகையில் வெளியிடப்படுகிறது. இதற்காக பக்தர்களும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளைக்கு லட்சக்கணக்கில் நன்கொடை வழங்கி வருகின்றனர்.
திருமலை மட்டுமன்றி, திருமலை வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ், பஸ் நிலையங்கள் மற்றும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கோவிந்தராஜர் கோயில், கோதண்டராமர் கோயில், திருப்பதி பஸ் மற்றும் ரயில் நிலையங்கள், மாதவம், நிவாசம், விஷ்ணு நிவாச தங்கும் விடுதிகள் என பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தற்போது ஆந்திராவில் ஆட்சி மாறியதும், பிஆர்.நாயுடு புதிய அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
இவருக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கிய ஆலோசனையின்படி, நேற்று முதல் திருமலையில் அன்னதானத்துடன் மசால் வடையும் பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது.
இதுதொடர்பாக பிஆர். நாயுடு செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதல்வரின் ஆலோசனையின்படி சோதனை அடிப்படையில் கடந்த ஒரு மாதமாக பக்தர்களுக்கு மசால் வடையும் அன்னதானத்துடன் வழங்கப்பட்டது. இதற்கு பலத்த வரவேற்பு கிடைத்ததால், இன்று முதல் (நேற்று) காலை முதல் மாலை 4 மணி வரை 35 ஆயிரம் மசால் வடைகள் அன்னதானத்துடன் பரிமாறப்படும். இது மெல்ல அதிகரிக்கப்படும்” என்றார். அன்னதானத்தில் பாயசம் வழங்கிவிட்டால் பக்தர்களுக்கு விருந்தாக அமைந்து விடும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT