Published : 06 Mar 2025 10:51 AM
Last Updated : 06 Mar 2025 10:51 AM
லண்டன்: “பாகிஸ்தானிடமிருந்து ஆக்கிரமிப்புகளை மீட்டுவிட்டால் காஷ்மீரின் மொத்தப்பிரச்சினையும் தீர்ந்துவிடும்” என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். பிரிட்டன், அயர்லாந்து நாடுகளுக்கு 6 நாட்கள் அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ளார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.
அமைச்சரை தாக்க முயற்சி: முன்னதாக லண்டனில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லேமியின் செவனிங் ஹவுஸில் இருதரப்பு ஆலோசனையில் கலந்து கொண்டார். அப்போது வெளியே திரண்டிருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஜெய்சங்கருக்கு எதிராக கோஷமிட்டனர். காலிஸ்தான் ஆதரவு பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். அதில் ஒருவர் அமைச்சர் ஜெய்சங்கர் சென்ற் காரின் முன்னால் பாய்ந்ததோடு அவரை தாக்கவும் முயற்சித்தார். அவரை காவலர்கள் லாவகமாகத் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் கையில் வைத்திருந்த இந்திய தேசியக் கொடியை கிழித்தெறிந்தார்.
காலிஸ்தான் ஆதரவாளர்களை, அமைச்சர் ஜெய்சங்கரை தாக்க முயன்றவரை போலீஸார் கைது செய்யாமல் எச்சரித்து அனுப்பினர். பிரிட்டன், கனடா நாடுகளில் இருக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீண்ட காலமாக அந்நாடுகளுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘பாக்., வெளியேறினால்..’ தொடர்ந்து, லண்டனில் உள்ள சவுதம் ஹவுஸில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காஷ்மீர் பிர்ச்சினை, ட்ரம்ப் வரிவிதிப்பு, சீன உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார்.
காஷ்மீர் பிரச்சினைக்கு ட்ரம்ப் உதவியை நாடி பிரதமர் மோடி தீர்வுகாண முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, “காஷ்மீரில், பெரும்பாலானவற்றை நாங்கள் சிறப்பாகச் சரிசெய்துள்ளோம். 370-வது சட்டப் பிரிவை நீக்கியது அதில் முதல் படி. அங்கே வளர்ச்சி, பொருளாதார நடவடிக்கைகள், சமூக நீதியை மீட்டெடுத்தது இரண்டாவது நகர்வு. மிக அதிகப்படியான வாக்குப்பதிவுடன் நடத்தப்பட்ட தேர்தல் மூன்றாவது படியாகும். நாங்கள் காத்திருக்கும் பகுதி, சட்டவிரோத பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் 'திருடப்பட்ட' பகுதியைத் திரும்பப் பெறுவது என்று நினைக்கிறேன். அது முடிந்ததும், காஷ்மீர் பிரச்சினை முற்றிலுமாக தீர்க்கப்படும்.
காஷ்மீரில் நிலவும் மனித உரிமைப் பிரச்சினைகளில் சில விஷயங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்துவதும், தீர்வு காண்பதும் அவசியமாக இருக்கலாம். ஆனால் உலகளவில் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியா மனித உரிமைகளைப் பேணுவதில் வலுவாக இருக்கிறது.” என ஜெய்சங்கர் பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT