Last Updated : 04 Mar, 2025 08:03 PM

 

Published : 04 Mar 2025 08:03 PM
Last Updated : 04 Mar 2025 08:03 PM

எஸ்டிபிஐ தலைவர் எம்.கே.ஃபைஸி கைது: டெல்லியில் அமலாக்கத் துறை திடீர் நடவடிக்கை

எம்.கே.ஃபைஸி

புதுடெல்லி: இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) தேசியத் தலைவர் எம்.கே.ஃபைஸியை அமலாக்கத் துறை டெல்லியில் கைது செய்துள்ளது. இந்த கைது பழிவாங்கும் நடவடிக்கை என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

ஃபைஸி கைது: கடந்த 2006 நவ.22-ல் உருவான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் அரசியல் பிரிவாக துவக்கப்பட்டதுதான் எஸ்டிபிஐ. இதன் தேசியத் தலைவரான ஃபைஸி மீது பணமோசடி புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அன்று, கேரளாவில் உள்ள ஃபைஸியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். பின்னர் அவரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு டெல்லி விமான நிலையத்தில் ஃபைஸி கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் ‘பழிவாங்கும் அரசியல்’ என விமர்சித்துள்ளன.

பழிவாங்கும் அரசியல்: இதுகுறித்து எஸ்டிபிஐ துணைத் தலைவர் முகமது ஷாஃபி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த கைது, கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கும் அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கும் பழிவாங்கும் அரசியலின் ஒரு பகுதியே தவிர வேறில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தீயநோக்கத்துக்காக... - மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு தனது கொள்கைகளுக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது அமலாக்கத் துறையை ஏவி ஒடுக்கும் செயலை தொடர்ந்து செய்கிறது. வெகுஜன மக்களிடம் சிறுபான்மையினருக்கு எதிரான தவறான புரிதல் ஏற்பட வேண்டும் என்ற தீயநோக்கத்துக்காக இந்தியப் புலனாய்வு அமைப்புகளை மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது.எம்.கே.ஃபைஸி கைதுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மத்திய அரசுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவுக்கு தடை: பாபுலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தன் உறுப்பு அமைப்புகளாக எட்டு இணைப்புகளுடன் மிகவும் பிரபலமாகி செயல்பட்டு வந்தது. இவை அனைத்தின் மீதும் சட்டவிரோத நடவடிக்கை புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து அமலாக்கத் துறை மற்றும் தேசிய புலனாய்வு நிறுவனம் பல இடங்களில் சோதனைகள் நடத்தின. இந்த சோதனை தமிழகம் உள்பட நாடு முழுவதிலும் பல இடங்களில் நடைபெற்றன.

இதில் ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறி, கடந்த 2022-ம் ஆண்டு செப்.28-ல் மத்திய உள்துறை அமைச்சகத்தால் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது பாபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் பல நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகளின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இருந்து பல ஆவணங்கள் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது.

ரூ.56 கோடி+ சொத்துகள் பறிமுதல்: இதன்படி, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்குவதில் பாபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா ஈடுபட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியது. 2021 முதல் பாபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் மூத்த உறுப்பினர்கள் உட்பட 26 பேரை மத்திய அமைலாக்கத் துறை கைது செய்துள்ளது. இவர்கள் மீதான வழக்குகளில் மேலும் 9 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. இந்த தடைக்கு பிறகு பாபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா உடன் தொடர்புடைய ரூ.56 கோடிக்கும் அதிகமான சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x