தெலங்கானாவில் பறவை காய்ச்சல் பாதிப்பால் 8,000 கோழிகள் உயிரிழப்பு

தெலங்கானாவில் பறவை காய்ச்சல் பாதிப்பால் 8,000 கோழிகள் உயிரிழப்பு
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்கானாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் கோழிகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஆந்திராவின் கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் கடந்த மாதம் உயிரிழந்தன. பறவை காய்ச்சலே இதற்கு காரணம் என ரத்தப் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த மாவட்டங்களில் பண்ணை கோழிகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தமிழகம், கர்நாடகா, தெலங்கானாவிலும் ஆந்திராவின் கோழிகள் விற்பனை ஆகவில்லை. இதனால் கோழி வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. தெலங்கானா மாநில எல்லைகளில் 24 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து ஆந்திர மாநில கோழிகளை தெலங்கானாவுக்குள் அனுமதிக்காமல் தடுத்தனர். ஆனாலும், தெலங்கானா மாநில எல்லையில் கம்மம் மாவட்டத்தில் கடந்த மாதம் பறவை காய்ச்சல் பரவியது.

இதைத் தொடர்ந்து, வாரங்கல், நல்கொண்டா, சூர்யாபேட்டை, மேதக் உள்ளிட்ட மாவட்டங்களில் பறவை காய்ச்சலால் பண்ணை கோழிகளின் உயிரிழப்பு அதிகரித்தது. இதனால், தெலங்கானா மக்களும் கோழி இறைச்சி உண்பதை தவிர்த்தனர். இந்நிலையில், நேற்று சங்காரெட்டி, மேதக் மாவட்டங்களில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8ஆயிரம் பண்ணைக் கோழிகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இப்பகுதிகளில் கோழிக்கறி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இறந்த கோழிகளின் ரத்தம், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in