திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுமா?

திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுமா?
Updated on
1 min read

திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது விமானங்கள் பறக்க தடை விதிப்பது குறித்து கலந்துபேசி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறியுள்ளார்.

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். தேவஸ்தான ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். திருமலையில் 24 மணி நேரமும் பக்தர்களின் கூட்டம் இருப்பதுடன் கோயிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தலும் இருப்பதால் வருடத்தின் 365 நாட்களும் தீவிர கண்காணிப்பில் இக்கோயில் உள்ளது.

குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் என விவிஐபி.க்களும் கோயிலுக்கு வருகின்றனர். இதனால் பாதுகாப்பு கருதி கோயில் மீது விமானங்களோ அல்லது ஹெலிகாப்டர்களோ பறக்க தடை விதிக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவுக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு கடிதம் எழுதி இருந்தார்.

இதுகுறித்து, நேற்று ஹைதராபாத் வந்திருந்த அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறுகையில், “இந்த கோரிக்கை தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து துறைக்கு தேவஸ்தானம் பலமுறை கடிதம் எழுதியுள்ளது. மேலும் பலரும் இது தொடர்பாக பேசி உள்ளனர். ஆதலால், இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கலந்துபேசி முடிவு எடுக்கப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in