

இந்தியாவில் வெளிநாட்டுப் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்யலாம் என்று ஆஸ்திரேலிய பெண் சுற்றுலா பயணி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தனியாக சுற்றுப் பயணம் செய்யும் வெளிநாட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. இதை ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெக் மெக்கோல் (24) திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு தனியாக சுற்றுலா சென்ற அவர், தனது பயணங்களை தொகுத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
வெளிநாடுகளில் இருந்து தனியாக இந்தியாவுக்கு வரும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுவதாக புகார் கூறப்படுகிறது. நான் தனியாக இந்தியாவுக்கு சுற்றுலா புறப்பட்டபோது என்னிடமும் இதே கருத்தை பலர் கூறினர். ஆனால் இந்த குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை.
நான் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இரவில் தனியாக நடந்து சென்றுள்ளேன். எனக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனது பயணங்கள் இனிமையாக அமைந்தன. இந்திய உணவு வகைகள் உடல்நலனுக்கு ஏற்றவை கிடையாது. அவற்றில் மசாலா வகைகள் அதிகம் சேர்க்கப்பட்டு இருக்கும் என்றும் சிலர் கூறினர். ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்திய உணவு வகைகள் மிகவும் ருசியாக உள்ளன. குறிப்பாக சைவ உணவு வகைகள் மிகவும் சுவையாக உள்ளன. இப்போது இந்திய உணவு வகைகளுக்காக நான் ஏங்குகிறேன்.
இந்தியாவில் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான நகரங்கள், யுனெஸ்கோ புராதன சின்னங்களை பார்த்து வியந்தேன். இந்த நேரத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சில அறிவுரைகளை கூற விரும்புகிறேன். இந்தியாவில் பாதுகாப்பாக பயணம் செய்யலாம். இந்தியாவின் வரலாறு நம்மை வியக்க வைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நெரிசலான சாலைகளில் ஆட்டோவில் பயணம் செய்தது, ஓட்டல்களில் இந்திய உணவு வகைகளை சுவைத்தது, புராதன சின்னங்களை பார்வையிட்டது உள்ளிட்ட வீடியோக்களை பெக் மெக்கோல் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோக்கள் வைரலாக பரவி வருகின்றன.