

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷாஜாதி கான் என்ற பெண்ணுக்கு அபுதாபியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஜாதி கான் (33) என்ற பெண், கடந்த 2021ஆம் ஆண்டு வீட்டு வேலைக்காக அபுதாபி சென்றுள்ளார். 2022-ம் ஆண்டு அந்த வீட்டின் உரிமையாளரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து அந்த குழந்தையை பராமரிக்கும் வேலையையும் ஷாஜாதி கான் செய்து வந்துள்ளார்.
இதனையடுத்து வழக்கமாக போடப்படும் தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், குழந்தை திடீரென உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியும், பெற்றோர் அதனை மறுத்து உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர், குழந்தையை ஷாஜாதி தான் கொலை செய்தார் என உரிமையாளர் தரப்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஷாஜாதி கான் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக ஒரு வீடியோவையும் அவர்கள் வெளியிட்டனர். இந்த வழக்கில் ஷாஜாதி கானுக்கு அபுதாபி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தியை தனது தந்தை ஷபீர் கானிடம் ஷாஜாதி தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஷாஜாதி கானின் தந்தை மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில், கடந்த 15ம் தேதி ஷாஜாதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தனது மகளுக்கு ஆதரவளிக்க இந்திய தூதரகம் தவறிவிட்டதாக ஷபீர் கான் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் முறையாக புகாரளித்தும் தனக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.