உலக வனவிலங்கு தினம்: கிர் தேசிய பூங்காவில் பிரதமர் மோடி ‘லயன் சஃபாரி’ - வைரலாகும் கிளிக்ஸ்!

படங்கள் உதவி: பிரதமரின் ட்விட்டர் பக்கம்.
படங்கள் உதவி: பிரதமரின் ட்விட்டர் பக்கம்.
Updated on
2 min read

புதுடெல்லி: உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். மேலும், பலத்த பாதுகாப்புடன் பயணம் செய்த மோடி, சிங்கங்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

குஜராத்துக்கு 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் மோடி கடந்த சனிக்கிழமை வந்தாா். பின்னர், அந்த மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கிா் சோம்நாத் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டாா்.

இதன் தொடர்ச்சியாக, இன்று காலை, உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். அப்போது, சில அமைச்சர்கள் மற்றும் மூத்த வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும், பலத்த பாதுகாப்புடன் பயணம் செய்த மோடி, சிங்கங்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி கவனம் பெற்று வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “உலக வனவிலங்கு தினத்தன்று, நமது பூமியில் உள்ள நம்பமுடியாத பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கான நமது உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம். ஒவ்வொரு உயிரினமும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. எதிர்கால சந்ததியினருக்காக உயிரினங்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்போம். வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் இந்தியாவின் பங்களிப்புக்காக பெருமை கொள்வோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

தேசிய வனவிலங்கு வாரியத்தின் (NBWL) ஏழாவது கூட்டத்திற்கும் பிரதமர் தலைமை தாங்குவார் என கூறப்படுகிறது. தேசிய வனவிலங்கு வாரியத்தில் ராணுவத் தலைமைத் தளபதி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், இந்தத் துறையில் பணிபுரியும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள், தலைமை வனவிலங்கு வார்டன்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த செயலாளர்கள் உட்பட 47 உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அவர்களுடன் உரையாடிய பிறகு, பிரதமர் மோடி சாசனில் உள்ள சில பெண் வன ஊழியர்களுடனும் உரையாடுவார்.

குஜராத்தில் மட்டும் வசிக்கும் ஆசிய சிங்கங்களைப் பாதுகாப்பதற்காக, Project Lion திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 2,900 கோடிக்கும் அதிகமாக ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, ​​குஜராத்தின் 9 மாவட்டங்களில் உள்ள 53 தாலுகாக்களில் கிட்டத்தட்ட 30,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஆசிய சிங்கங்கள் வாழ்கின்றன.

கூடுதலாக, அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜூனகத் மாவட்டத்தில் உள்ள நியூ பிபால்யாவில் 20.24 ஹெக்டேர் நிலப்பரப்பில் வனவிலங்குகளுக்கான தேசிய பரிந்துரை மையம் (National Referral Center) நிறுவப்பட இருக்கிறது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in