ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைய கடைசி வாய்ப்பு: கெடுவை நீட்டித்தார் மணிப்பூர் ஆளுநர் அஜய்

ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைய கடைசி வாய்ப்பு: கெடுவை நீட்டித்தார் மணிப்பூர் ஆளுநர் அஜய்
Updated on
1 min read

இம்பால்: மணிப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அமைப்பினர் வரும் மார்ச் 6-ம் தேதிக்குள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரண் அடையவேண்டும் என்று மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா காலக்கெடுவை நீட்டித்துள்ளார்.

மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மைதேயி, குக்கி இனத்தவரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரம் இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள், பாதுகாப்புப் படையினரிடமிருந்து கொள்ளையடித்துச் சென்ற ஆயுதங்களை தந்துவிட்டு கடந்த பிப்ரவரி 20-ம் தேதிக்குள் சரண் அடையவேண்டும் என்று ஆளுநர் அஜய் குமார் பல்லா அழைப்பு விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த 7 நாட்களில் 300-க்கும் மேற்பட்ட ஆயுதங்களை, போலீஸாரிடம் போராட்டக்காரர்கள் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து போராட்டக்குழுவினர், சரண் அடையும் காலத்தை மார்ச் 6-ம் தேதி வரை ஆளுநர் அஜய் குமார் நீட்டித்துள்ளார்.

ஆளுநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறும்போது, “சரண் அடைய முன் வருபவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும். மார்ச் 6-ம் தேதி மாலை 4 மணிக்குள் அவர்கள் சரண் அடையவேண்டும்.

சரண் அடைபவர்கள் மீது தண்டனை நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது. அமைதி, சமூக நல்லிணக்கம், நமது இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் நமது சமூகத்தின் பாதுகாப்புக்கு பங்களிக்க சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும்" என்றார்.

மணிப்பூரில் கடந்த 2023 முதல் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 13-ம் தேதி மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in