அனுமதி பெறாத கொடிக்கம்பங்களுக்கு தடை: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

அனுமதி பெறாத கொடிக்கம்பங்களுக்கு தடை: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கொச்சி: உரிய முன் அனுமதியின்றி பொது இடங்களில் கொடிக்கம்பங்களை நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ வைப்பதற்கு யாரையும் அனுமதிக்க கூடாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள உயர்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: அனைத்து சட்டவிரோத கொடிக்கம்பங்களும் அரசியல் கட்சி, தொழிற்சங்கம் போன்றவற்றால் நிறுவப்பட்டவை என்பதால் மாநில அரசு இதற்கான கொள்கை வகுப்பதில் தயக்கம் காட்டி வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான கொடிக்கம்பங்கள் அமைக்கப்படாது என அரசு கடந்த காலங்களில் பல முறை உறுதியளித்தும் அதனை செயல்படுத்துவில்லை. ஏற்கெனவே நிறுவப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கான கொள்கைகளையும் வகுக்காமல் அரசு தொடர்ந்து வேண்டுமென்றே கால தாமதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், அரசு தற்போது பிறப்பித்த பல உத்தரவுகளின் மூலம், மாநிலத்தின் பொது இடங்களில் எந்த பகுதியிலும் உரிய அதிகாரிகளின் அனுமதியின்ற புதிய நிரந்தர அல்லது தற்காலிக கொடிக்கம்பங்கள் வைக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று உறுதியளித்துள்ளது. இதனை உறுதியாக கடைபிடிக்கும் என்று இந்த கோர்ட் நம்புகிறது.

பொது இடத்திலோ அல்லது புறம்போக்கு நிலத்திலோ, சாலை ஓரங்களிலோ உரிய அதிகாரியின் அனுமதியில்லாமல் எந்தவொரு நபர் அல்லது அமைப்பும் கொடிக்கம்பம் நிறுவ இனி தடைவிதிக்கப்படுகிறது. ஏற்கெனவே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற இந்த தீர்ப்பின் நகலைப் பெற்ற நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும், சம்பந்தப்பட்ட பிற நிறுவனங்களுக்கும் இது தொடர்பாக உள்ளாட்சி துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in