

ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் மாநிலங்களவை எம்.பி. மகுவா மாஜி உள்ளிட்ட 4 பேர் கும்பமேளாவுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் சாலை விபத்தில் காயம் அடைந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜேஎம்எம் எம்.பி. மகுவா மாஜி தனது மகன், மருமகளுடன் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா கும்பமேளாவுக்கு சென்றார். திரிவேணி சங்கமத்தில் இவர்கள் புனித நீராடிய பிறகு நேற்று முன்தினம் இரவு ராஞ்சிக்கு புறப்பட்டனர்.
இந்நிலையில் இவர்களின் கார், நேற்று அதிகாலை 3.45 மணியளவில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் லத்தேகார் மாவட்டம் ஹாட்வாக் அருகில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியது.
இதில் மகுவா மாஜி, அவரது மகன் சோம்விட் மாஜி, மருமகள் கீர்த்தி ஸ்ரீவஸ்தவா, டிரைவர் புபேந்திர பாஸ்கி ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். இதையடுத்து இவர்கள் ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் அபாய கட்டத்தை கடந்துவிட்டதாகவும் இவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காரை சோம்விட் மாஜி ஓட்டியதாவும் அதிகாலையில் இவர் கண்ணயர்ந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.