நாட்டு மக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டம்: மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்

குறியீட்டுப் படம்
குறியீட்டுப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக மத்திய தொழிலாளர் அமைச்சக வட்டாரம் கூறும் தகவல்கள்: நாட்டில் தற்போது அரசு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய திட்டப்படி அரசு பணியாளர்கள் மற்றும் அரசின் பங்களிப்போடு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான வாய்ப்பை ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம் வழங்குகிறது. இத்திட்டத்தில், பணியாளர் மற்றும் பணி வழங்கும் நிறுவனம் ஆகிய இரு தரப்பின் பங்களிப்பு மட்டுமே இருக்கிறது. அரசுக்கு இதில் எந்த பங்களிப்பும் இல்லை.

மூன்றாவதாக, கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள் உள்ளிட்ட முறைசாரா தொழிலளார்களுக்கு அரசாங்கத்தால் நடத்தப்படும் அடல் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட சில திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இத்திட்டங்களில் முதலீட்டாளர் 60 வயதை எட்டிய பிறகு மாதந்தோறும் ரூ.1,000 - ரூ.1,500 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இதேபோல், வீதிகளில் பொருட்களை விற்பவர்கள், தினக்கூலிகள் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களுக்காக பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் (PM-SYM) திட்டமும், விவசாய தொழிலாளர்களுக்கான பிரதான் மந்திரி கிசான் மந்தன் திட்டமும் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சுய தொழில் செய்பவர்கள், முறைசாரா தொழிலாளர்கள் என நாட்டு மக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஏற்கெனவே உள்ள சில ஓய்வூதிய திட்டங்களை இணைத்து ஓய்வூதிய கட்டமைப்பை நெறிப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்த ஓய்வூதிய திட்டத்தில் மக்கள் தங்கள் விருப்பப்படி இணைந்து கொள்ள முடியும். இத்திட்டம் எந்தவொரு குடிமகனுக்கும் பாதுகாப்பானதாக இருக்கும். 'புதிய ஓய்வூதியத் திட்டம்' என்று இப்போதைக்கு அழைக்கப்படும் இந்தப் புதிய திட்டம், தற்போதுள்ள தேசிய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றாது, அதில் இணைக்கவும் செய்யாது. இது ஒரு தன்னார்வ ஓய்வூதியத் திட்டமாக இருக்கும். இந்தத் திட்டம் தொடர்பான ஆவணங்கள் இறுதி செய்யப்பட்டவுடன் இது தொடர்பான ஆலோசனை தொடங்கும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in