சம்பல் மசூதி நிர்வாகம் பொது நிலத்தை அபகரிக்க முயற்சி: உச்ச நீதிமன்றத்தில் உ.பி. அரசு தகவல்

சம்பல் மசூதி நிர்வாகம் பொது நிலத்தை அபகரிக்க முயற்சி: உச்ச நீதிமன்றத்தில் உ.பி. அரசு தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: சம்பல் மசூதி நிர்வாகம் பொது இடத்தை ஆக்கிரமிக்க முயல்வதாக உத்தர பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் 16-ம் நூற்றாண்டில் முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஜமா மசூதி உள்ளது. அந்த இடத்தில் கோயில் இருந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம் தொல்லியல் துறை ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பயங்கர கலவரம் வெடித்தது. போலீஸாருடன் நடந்த மோதலில் பலர் உயிரிழந்தனர்.

சம்பல் மசூதி வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில் உத்தர பிரதேச அரசு நிலை அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சம்பல் மசூதி மற்றும் அதனுடன் இணைந்த கிணறு பிரச்சினையின் மையப்புள்ளியாக உள்ளது. இவை இரண்டுமே பொது நிலத்தில் அமைந்துள்ளது. ஆனால், மசூதி நிர்வாகத்தினர் அதன் மீது தனிப்பட்ட உரிமை கோர முயற்சிக்கின்றனர். பிரச்சினைக்கு காரணமான கிணறு பொதுக் கிணறு. அது, சர்ச்சைக்குரிய மசூதியின் இடத்துக்குள் அமையவில்லை.

ஆனால், மசூதி நிர்வாகத்தினர் கடந்த மாதம் கூகுள் மேப் படங்களை மேற்கோள்காட்டி இது மசூதியின் வளாகத்துக்குள் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மனுதாரர் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் நோக்கில் புகைப்படங்களை உள்நோக்கத்துடன் விண்ணப்பத்தில் இணைத்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகத்தால் மழைநீர் சேகரிக்கும் சம்பலில் உள்ள 19 கிணறுகளில் ஒன்றாக இந்த கிணறு உள்ளது. கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவதால் பழமையான இந்த கிணறு சுற்றுலாவை ஈர்க்கும்.

இந்த நிலையில் மசூதி நிர்வாகத்தின் மனுவானது இந்த பகுதியின் மறுமலர்ச்சியை தோல்வியடைச் செய்யும் முயற்சி மட்டுமல்ல அப்பகுதியின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாகும். எனவே, அவர்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு உ.பி. அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in