“மதத்தை கேலி செய்து மக்களை பிளவுபடுத்த சில தலைவர்கள் முயல்கிறார்கள்” - பிரதமர் மோடி

“மதத்தை கேலி செய்து மக்களை பிளவுபடுத்த சில தலைவர்கள் முயல்கிறார்கள்” - பிரதமர் மோடி
Updated on
1 min read

சத்தர்பூர்: மகா கும்பமேளா குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில் "இப்போதெல்லாம் சில தலைவர்கள் குழு, மதத்தை கேலி செய்தும், மக்களை பிளவுபடுத்தவும் முயற்சி செய்கிறது" என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூரில் பாகேஷ்வர் தாமில், புற்றுநோய்க்கான மருத்துவம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடிக்கல் நாட்டினார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, "சில தலைவர்கள் குழு, மதத்தைக் கேலி செய்தும், மக்களை பிளவுபடுத்தவும் முயற்சி செய்கிறது. பல நேரங்களில் அந்நிய சக்திகள் அவர்களுக்கு உதவி செய்து இந்தியாவையும் அதன் மதத்தையும் பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன. இந்து நம்பிக்கைகளை வெறுக்கும் மக்கள், பல நூற்றாண்டுகளாக ஏதோ ஒரு கட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

அடிமை மனநிலையில் வீழ்ந்திருக்கும் மக்கள், நமது நம்பிக்கைகள், சடங்குகள், கோயில்கள், நமது மதங்கள், கலாச்சாரம் மற்றும் கொள்கைகளை தொடர்ந்து தாக்கி வருகின்றனர். அவர்கள் நமது திருவிழாக்கள், பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்களை துஷ்பிரயோகம் செய்கின்றனர். முற்போக்கான மதம் மற்றும் கலாச்சாரத்தை தாக்குவது இயல்புதான். நமது சமூகத்தை பிரித்து அதன் ஒற்றுமையை உடைப்பதே அவர்களின் நோக்கம்.

இந்த நேரத்தில், தீரேந்திர சாஸ்திரி நீண்ட காலமாக நாட்டை ஒற்றுமையுடன் காப்பது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு உணர்த்தி வருகிறார். இப்போது, சமூகம் மற்றும் மனிதத்தின் மீதான ஆர்வத்தில் அவர் மற்றொரு தீர்மானத்துக்கும் வந்துள்ளார். இந்த புற்றுநோய்க்கான நிறுவனத்தை கட்டுவதுதான் அது. அதாவது, இனி பாகேஷ்வர் தாமில் நீங்கள், பஜனைகளின் ஆசீர்வாதம், உணவு மற்றும் ஆரோக்கியத்தினையும் பெறலாம்.

மிகக்குறுகிய காலத்தில் மாவீரர்களின் பூமியான பண்டேல்கண்டுக்கு இரண்டாவது முறையாக செல்லும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்துள்ளது. இம்முறை எனக்கு பாலாஜியிடமிருந்து அழைப்பு வந்தது. ஹனுமனின் ஆசீர்வாதத்தால், நம்பிக்கையின் மையம், இனிமேல் ஆரோக்கியத்தின் மையமாகவும் மாறப்போகிறது. சிறிது நேரத்துக்கு முன்புதான் ஸ்ரீபாகேஸ்வர் தாம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நான் அடிக்கல் நாட்டினேன்.

அந்த நிறுவனம் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட உள்ளது. முதல் கட்டத்திலேயே 100 படுக்கைகள் கொண்ட வசதிகள் தயாராக இருக்கும். இந்த குறிப்பிடத்தகுந்த பணிக்காக தீரேந்திர சாஸ்திரிகளையும் பண்டல்கண்ட் மக்களையும் நான் வாழ்த்துகிறேன்" இவ்வாறு பிரதமர் பேசினார். பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக மத்தியப்பிரதேசம் சென்றுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in