ஏர் இந்தியா விமானத்தில் உடைந்த இருக்கை: அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வேதனை
புதுடெல்லி: மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் 'எக்ஸ்' தளத்தில் அமைச்சர் சவுகான் தனது பதிவில் கூறியிருப்பதாவது:
நான் டெல்லி செல்ல ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் சென்று அமரும்போது அது உடைந்திருப்பதை பார்த்தேன். அந்த இருக்கை உட்காருவதற்கு அசவுகரியமாக இருந்தது. எனது இருக்கை மட்டுமின்றி மேலும் பல இருக்கைகள் அவ்வாறு இருந்தன.
சக பயணிகள் எனக்கு சவுகரியமான இருக்கையை அளிக்க முன்வந்தனர். ஆனால் எனது சவுகரியத்துக்காக மற்றொரு பயணியை ஏன் சிரமப்படுத்த வேண்டும்? எனவே அதே இருக்கையில் பயணம் செய்ய முடிவு செய்தேன்.
ஏர் இந்தியா நிர்வாகத்தை டாடா ஏற்ற பிறகு அதன் சேவை மேம்பட்டிருக்கும் என நினைத்தேன். ஆனால் அது தவறு என்பதை உணர்ந்தேன்.
உட்காருவதில் உள்ள அசவுகரியம் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் முழுத் தொகையும் வசூலித்த பிறகு மோசமான இருக்கைகளில் பயணிகளை அமர வைப்பது நெறிமுறைக்கு விரோதமானது. இது பயணிகளை ஏமாற்றுவது இல்லையா? இவ்வாறு சவுகான் தனது பதிவில் கூறியிருந்தார்.
அமைச்சர் சவுகானுக்கு ஏற்பட்ட இந்த அசவுகரியத்துக்கு டாடா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
