மியான்மரில் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடுவோரில் 2 ஆயிரம் பேர் இந்தியர்கள்

மியான்மரில் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடுவோரில் 2 ஆயிரம் பேர் இந்தியர்கள்
Updated on
1 min read

ஹைதராபாத்: இந்தியாவில் டிஜிட்டல் அரெஸ்ட், இணையதளம் வழி பண மோசடி உள்ளிட்ட சைபர் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்கள் பெரும்பாலும் மியான்மர், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து அரங்கேறுவது தெரியவந்துள்ளது. அதிலும், இந்தியாவைச் சேர்ந்த சில முகவர்கள் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களை இதுபோன்ற மோசடி கும்பலிடம் சிக்க வைத்து விடுகின்றனர்.

அந்த வகையில், மியான்மர்-தாய்லாந்து எல்லையில் மியாவாடி என்ற பகுதி ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கிருந்தபடி சைபர் மோசடி கும்பல் இயங்கி வருவது தெரியவந்துள்ளது. இதில் சுமார் 2 ஆயிரம் இந்தியர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் பலர் முகவர்கள் மூலம் வேலைக்காக சென்று சிக்கிக் கொண்டவர்கள் ஆவர். இவர்களால் மீண்டு வரமுடியாததால் வேறு வழியின்றி இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலர் விருப்பப்பட்டு பணியாற்றுவதும் தெரியவந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், சைபர் மோசடி கும்பலிடம் சிக்கியவர்களை மீட்க இந்திய தூதரகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன்படி, மியான்மரின் யாங்கூனில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன், கடந்த 18-ம் தேதி 3 இந்தியர்கள் மியாவாடி பகுதியிலிருந்து தப்பி வந்துள்ளனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2022-ம் ஆண்டு முதல் மியான்மர், கம்போடியா, லாவோஸ் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கியிருந்த சுமார் 600 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in