பிரதமரின் 2-வது முதன்மைச் செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமனம்

சக்திகாந்த தாஸ் | கோப்புப்படம்
சக்திகாந்த தாஸ் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது முதன்மைச் செயலாளர் ஆக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றறிகையில், பிரதமரின் முதன்மைச் செயலாளர்-2 ஆக சக்திகாந்த தாஸை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து அவரின் நியமனம் அமலுக்கு வரும் என்றும், அவரின் பதவிக் காலம் பிரதமரின் பதவிக் காலம் முடியும் வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பி.கே.மிஸ்ரா, 2019 செப்டம்பர் 11 முதல் பிரதமரின் முதன்மைச் செயலாளராக இருந்து வருகிறார். அவருடன் முதன்மைச் செயலாளர்-2 ஆக சக்திகாந்த தாஸ் இருப்பார்.

யார் இந்த சக்திகாந்த தாஸ்? - கடந்த 1957-ம் ஆண்டு பிப்ரவரி 26-ல் புவனேஸ்வரில் பிறந்த சக்திகாந்த தாஸ், வரலாற்றில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை டெல்லி புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியில் முடித்தார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான இவர், 1980 பேட்ச் தமிழ்நாடு கேடராவார். இவர் தமிழகம் மற்றும் மத்திய அரசுகளில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கியின் 25-வது ஆளுநராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்றுக்கொண்ட காலத்தில் நாடு நிதித்துறை மற்றும் பொருளாதார அழுத்தங்களில் இருந்தது. கடந்த 2016 நவம்பரில் மத்திய அரசு பணமதிப்பிழப்பு அறிவித்தபோது, இவர் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக இருந்தார். அதேபோல், 2017-ம் ஆண்டு பல மறைமுக வரிகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒற்றை ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டத்தில் சக்திகாந்த தாஸ் முக்கியப் பங்காற்றினார்.

காரோனா பெருந்தொற்று, புவிசார் அரசியல் பதற்றம், அதிக பணவீக்கம் உள்ளிட்ட கொந்தளிப்பான காலக்கட்டங்களில் இந்தியாவின் பொருளாதாரத்தை நிலைத்த தன்மையுடன் வழி நடத்தியதற்காக ஆர்பிஐ ஆளுநராக இவரது பதவிக்காலம் பெரிதும் கவனிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவருக்கு 2021-ம் ஆண்டில் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பதவிகாலம் நீட்டிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில் சக்திகாந்த தாஸ் ஓய்வு பெற்றார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது முதன்மைச் செயலாளராக இப்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in