Chhava பட ‘தாக்கம்’ - டெல்லி அக்பர், ஹுமாயூன் சாலை பெயர் பலகைகளில் கருப்பு மை பூசியவர்களால் பரபரப்பு
புதுடெல்லி: டெல்லியில் உள்ள அக்பர் சாலை, ஹுமாயூன் சாலை பெயர் பலகைகளில் கருப்பு மை பூசி, அந்த அறிவிப்பு போர்டு மீது ‘ச்சாவா’ (Chhava) பட போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு நிலவியது. ‘சாவா’ திரைப்பட தாக்கத்தின் காரணமாக ரசிகர்கள் இதனைச் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோக்களில், இளைஞர்கள் சிலர் அக்பர் சாலை, ஹுமாயூன் சாலை என்ற பெயர் பலகைகளில் கருப்பு பெயின்டை அடித்து பின்பு அதன்மேல் ‘ச்சாவா’ பட போஸ்டரை ஒட்டுவது பதிவாகியுள்ளது. இது குறித்து போலீஸார் கூறுகையில், "போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெயர் பலகைகளில் செய்யப்பட்டிருந்த அத்துமீறல்களை சரிசெய்து அதனை பழைய நிலையில் மீட்டெடுத்தனர்.
இதுகுறித்து விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும், மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்கவும் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தனர். ‘ச்சாவா’ திரைப்படம் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கின்றனர். சமூக ஊடகங்களில் பரவும் பல வீடியோக்களில் அவர்கள் மராத்திய மன்னர் சத்திரபதி சிவாஜி மற்றும் அவரது மகன் சம்பாஜியை புகழ்ந்து கோஷமிடுகின்றனர்.
‘சாவா’ திரைப்பட வெற்றி: மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகன் சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்திப் படம், ‘ச்சாவா’ (Chhaava). சாம்பாஜி மகாராஜாவின் தியாகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் சாம்பாஜி மகாராஜாவாக விக்கி கவுசல், அவர் மனைவியாக ராஷ்மிகா மந்தனா, அவுரங்கசீப்பாக அக்ஷய் கன்னா உட்பட பலர் நடித்துள்ளனர். லக்ஷ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பிப்.14-ம் தேதி வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்று வசூல் குவித்து வருகிறது. கடந்த 7 நாட்களில் இந்தப் படம் ரூ.270 கோடியை வசூலித்துள்ளது. இந்தப் படத்துக்கு மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து கோவா மாநிலத்திலும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியும் இந்த திரைப்படத்தை பாராட்டி பேசியுள்ளார். வெள்ளிக்கிழமை டெல்லியில் நடந்த 98-வது அகில பாரதிய மாராத்தி சாஹித்ய சம்மேளனத்தில் பேசிய பிரதமர், "மகாராஷ்டிராவும் மும்பையும் மராத்தி சினிமாவுடன் இந்தி சினிமாவையும் உயர்த்தி இருக்கிறது. தற்போது ‘ச்சாவா’ திரைப்படம் புதிய அலையை உருவாக்கியுள்ளது" என்றார்.
அதேபோல், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறுகையில், "சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வீரம் மற்றும் தைரியத்தை வெளிப்படுத்தும் வகையில் தேவ், தேஷ் மற்றும் தர்மா பாத்திரங்களில் விக்கி கவுஷல் நடித்துள்ள திரைப்படம் ஒரு மகத்தான வரலாற்றைத் திரையில் கொண்டு வந்துள்ளது. முகலாயர்கள் மற்றும் போர்ச்சுகீசியர்களுக்கு எதிராக போராடிய இந்து சுயராஜ்யத்தின் இரண்டாவது சத்ரபதியின் தியாகம் நமக்கு எல்லாம் உத்வேகம் அளிப்பவை" என்று தெரிவித்துள்ளார்.
