

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸுக்கும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக கூறப்படும் நிலையில் தன்னை இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று ஷிண்டே கூறியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது: “நான் ஒரு சாதாரண கட்சி தொண்டன். ஆனால் நான் பால் தாக்கரேவின் விசுவாசியும் கூட. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 2022-ல் என்னை சிலர் இலகுவாக எடுத்துக் கொண்டனர். நான் அந்த அரசாங்கத்தையே கவிழ்த்துவிட்டேன்.
சட்டமன்றத்தில் எனது முதல் உரையிலேயே, தேவேந்திர ஃபட்னாவிஸ் 200-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறுவார் என்று நான் கூறினேன். ஆனால் எங்களுக்கு 232 இடங்கள் கிடைத்தன. அதனால்தான் என்னை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறுகிறேன்" இவ்வாறு ஷிண்டே தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாகவே ஏக்நாத் ஷிண்டேவுக்கும் மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஃபட்னாவிஸ் உடனான சந்திப்புகளையும் ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே இருந்தபோது ஜல்னா நகரில் ரூ.900 கோடி ரூபாய்க்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால் அந்த திட்டத்தை தற்போது ஃபட்னாவிஸ் நிறுத்தி வைத்ததால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டில், 40 எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேவின் ஆட்சியை கவிழ்த்தார். இது சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தியது. பின்னர் அவர் பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைத்து முதலமைச்சரானார். அதன் பிறகு கடந்த 2024 மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக - சிவசேனா (ஷிண்டே அணி) அமோக வெற்றி பெற்றது. தற்போது ஷிண்டே வசம் 57 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
முன்னதாக வியாழக்கிழமை ஏக்நாத் ஷிண்டேவின் காரை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும் இதன்மூலம் அவரை கொல்லப் போவதாகவும் மிரட்டல் வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.