காங்கிரஸ் கட்சியில் சில தலைவர்கள் பேசுவதேயில்லை: அருண் ஜேட்லி

காங்கிரஸ் கட்சியில் சில தலைவர்கள் பேசுவதேயில்லை: அருண் ஜேட்லி
Updated on
1 min read

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி அமளியில் ஈடுபட்டதற்கு அருண் ஜேட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமளியில் ஈடுபட்டது குறித்து கருத்து தெரிவித்த அவர், காங்கிரஸ் கட்சிக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளது, எனவே அந்தக் கட்சிக்கு இப்போது தேவை நிதானமான சுயபரிசோதனையே என்றார்.

மக்களவையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அதிகரித்து வரும் மத வன்முறைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தது.

மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சபாநாயகர் இருக்கை அருகே வந்து கோஷங்கள் எழுப்பினார்.

சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எதிர்கட்சியினரை பேச அனுமதிப்பதில்லை என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு எழுப்பியதையடுத்து அருண் ஜேட்லி கூறியதாவது:

"நாளுக்கு நாள் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர். அதற்காக சபாநாயகரையே விவாதத்திற்கு அழைப்பது எந்த விதத்தில் முறையானது? தாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றினால் அவர்கள் தங்கள் கட்சியை முன்னின்று வழிநடத்த வேண்டும் அதை விடுத்து அவையின் நடவடிக்கைகளை முடக்குவது கூடாது. காங்கிரஸ் கட்சி தங்கள் கட்சியைப் பற்றி சுயபரிசீலனை செய்யும் கட்டத்தில் உள்ளது.

அவையில் எதிர்க்கட்சியினரை பேச அனுமதிப்பதில்லை என்று காங்கிரஸார் கூறிவருகின்றனர், ஆனால் அந்தக் கட்சியில் சிலர் அவையில் பேசுவதேயில்லை. ஆனாலும் ஆளும் கட்சி மீது அந்தப் பேசாத நபர்களே குற்றம் சுமத்துகின்றனர்.

ஒவ்வொரு விவாதத்திலும் காங்கிரஸ் கட்சி பங்குபெற்றுள்ளது. ஆனால் சில வேளைகளில் அவை நடவடிக்கைகளை நடக்கவிடாமல் தடுக்கவும் செய்கிறது. பிரச்சினைகளை அவர்கள் எழுப்ப தடை விதித்ததாக ஒரு சிறு சந்தர்ப்பத்தைக் கூட அவர்களால் காட்ட முடியாது” என்று சாடியுள்ளார் அருண் ஜேட்லி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in