இந்தியாவுக்கு பல ஆண்டாக அமெரிக்கா அளித்த நிதியுதவி குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுக: காங்கிரஸ்

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி ரத்து செய்யப்பட்ட விவகாரம் பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘இந்தியாவில் பல ஆண்டுகளாக அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு அமெரிக்கா அளித்த நிதியுதவி குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இப்போது எல்லாம் அமெரிக்க உதவி என்பது பற்றிய செய்திகள் அடிக்கடி வருகிறது. இது 1961-ம் ஆண்டு நவம்பர் 3-ல் ஆரம்பிக்கப்பட்டது. பொதுப்படையாக அமெரிக்க அதிபர் கூறியிருக்கும் கருத்து முட்டாள்தனமானது. இவ்வாறு இருக்கையில் பல ஆண்டுகளாக இந்திய அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அமெரிக்க அரசின் உதவிகள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க நாம் ஏன் 21 மில்லியன் டாலரை வழங்க வேண்டும்?” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியிருப்பதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி இவ்வாறு வலியுறுத்தியுள்ளது. முன்னதாக மியாமியில் பேசிய ட்ரம்ப், “இந்தியாவின் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க பைடன் நிர்வாகம் 21 மில்லியன் டாலரை வாரிவழங்கியது ஏன்? அவர்கள் அங்கே வேறு யாரோ தேர்வாக வேண்டும் என்பதற்காகக் கொடுத்திருக்கலாம் என நான் ஊகிக்கிறேன். இது ஒரு மிகப் பெரிய கண்டுபிடிப்பு என்பதை இந்திய அரசுக்குச் சொல்ல வேண்டும்” என்று கூறியிருந்தார்.

பின்புலம் என்ன? - அமெரிக்கா சார்பில் உலகம் முழுவதும் சுமார் 180 நாடுகளுக்கு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஓராண்டில் சுமார் 68 பில்லியன் டாலரை அமெரிக்கா செலவிடுகிறது. இதில் உக்ரைன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு பெருமளவு நிதி வழங்கப்படுகிறது. கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன், ‘அரசு செயல் திறன்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக தொழிலதிபர் எலன் மஸ்க் நியமிக்கப்பட்டார்.

இந்த புதிய துறை அமெரிக்க அரசின் செலவினங்களை குறைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி ரத்து செய்யப்படுவதாக டிஓடிஜி அறிவித்தது. இதன்படி இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in