

ரம்ஜான் நோன்பு நாட்களில் தெலங்கானா மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் முஸ்லிம்கள் ஒரு மணி நேரம் முன்னதாக, அதாவது மாலை 4 மணிக்கே வீடுகளுக்கு செல்லாம் என தெலங்கானா அரசு புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது. இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ரேவந்த் ரெட்டி தலைமையிலான தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசு தரப்பில் நேற்று அம்மாநில தலைமை செயலாளர் சாந்திகுமாரி புதிய அரசாணையை வெளியிட்டுள்ளார். அதாவது, ரம்ஜான் நோன்பு வரும் மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இது மார்ச் மாதம் 31-ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த நாட்களில் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் நோன்பு இருப்பதால், அரசு, தனியார், கார்பரேஷன் அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லீம்கள் மாலை 5 மணிக்கு பதிலாக ஒருமணி நேரம் முன்னதாக, அதாவது மாலை 4 மணிக்கே தொழுகை செய்ய வீட்டிற்கு செல்ல இந்த அரசு சிறப்பு அனுமதி வழங்குகிறது.எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள், உயர் பதவியில் இருப்பவர்கள் இதனை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முஸ்லீம்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாலும், இதனை பாஜக மற்றும் இதர அமைப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பாஜகவின் தெலங்கானா ஐடி பிரிவு தலைவர் அமிட் மால்வியா கூறும்போது, தெலங்கானா முஸ்லிம்களின் ஓட்டு வங்கியை குறிவைத்து வெளியிடுப்பட்டுள்ள ஒரு அறிக்கையாகவே இதனை நாங்கள் பார்க்கிறோம். ஒரு மதத்தினருக்கு சாதகமாக ஒரு பண்டிகைக்கு நோன்புக்கு அனுமதி வழங்கினால், தசரா பண்டிகை உள்ளிட்ட பல இந்து பண்டிகைகளுக்கும் இதே போன்று சிறப்பு அனுமதி வழங்கிட வேண்டும் என கூறியுள்ளார். பாஜகவின் மற்றொரு மூத்த தலைவர் முரளிதர் ராவ் பேசுகையில், காங்கிரஸ் மீண்டும் தனது மத அடிப்படையிலான தத்துவத்தை நிரூபணம் செய்துள்ளது. இதே நிலை நீடித்தால் அது ஒரு தவறான உதாரணத்தை பிற்காலத்தில் கொடுத்து விடும். ஆதலால், இந்த அரசாணையை உடனடியாக தெலங்கானா அரசு வாபஸ் பெற வேண்டும். இல்லையேல் இதர மதத்தவரின் முக்கிய பண்டிகைகளுக்கும் இதேபோல் ஒரு மணி நேரம் சிறப்பு அனுமதி வழங்கிட வேண்டும் என கூறியுள்ளார்.