“விண்வெளி உட்பட பல துறைகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது” - மத்திய இணை அமைச்சர் பெருமிதம்

“விண்வெளி உட்பட பல துறைகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது” - மத்திய இணை அமைச்சர் பெருமிதம்
Updated on
2 min read

புதுடெல்லி: இந்தியா மற்ற நாடுகளைப் பின்பற்றும் நிலையில் இல்லாமல் பல்வேறு துறைகளில் முன்னணி நாடாகத் திகழ்கிறது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்துள்ள பேட்டியில், "இந்தியா மற்ற நாடுகளைப் பின்பற்றும் நிலையில் இல்லாமல் பல்வேறு துறைகளில் முன்னணி நாடாகத் திகழ்கிறது. குறிப்பாக, இந்திய விண்வெளித் துறையில், சந்திரயான் -3 முதல் இந்திய விண்வெளி நிலையம் வரை, விண்வெளி ஆய்வில் உலகின் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. டி.என்.ஏ அடிப்படையிலான கோவிட் -19 தடுப்பூசி, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான முதல் ஹெர்பெஸ் வைரஸ் தடுப்பூசி ஆகிய சுகாதார கண்டுபிடிப்புகளில் இந்தியா உலகின் முன்னணி நாடாக உள்ளது.

இந்தியாவின் உயிரி பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்கொண்டால், நாட்டின் உயிரி பொருளாதாரம் 10 பில்லியன் டாலரில் இருந்து 140 பில்லியன் டாலராக அதிகத்துள்ளது. வளர்ந்து வரும் உயிரி தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுடன் இது 250 மில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்டுகிறது. விண்வெளி உயிரியலில் முன்னோடி நாடாக இந்தியா உள்ளது. விண்வெளி உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்துதல், பூமிக்கு அப்பாலான நிலையான வாழ்க்கை குறித்த ஆய்வு ஆகியவற்றில் இந்தியா முன்னேறி வருகிறது.

நாட்டின் அணுமின் உற்பத்தி வரும் 2047-ம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் உற்பத்தி திறனை எட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2030-ம் ஆண்டுக்குள் அறிவியல் ஆய்வுகளில் இந்தியா உலகின் முன்னணி நாடாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா பிற நாடுகளை சார்ந்திருக்கும் நிலையிலிருந்து மாற்றம் பெற்று பல்வேறு துறைகளில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. இதன் காரணமாக, உலக அரங்கில் இந்தியா ஒரு முக்கிய நாடாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் விண்வெளித் துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் மாற்றத்தைக் கண்டு வருகிறது. விண்வெளியில் 2 செயற்கைக் கோள்களை இணைக்கும் செயல், நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது. இது ககன்யான், சந்திரயான்-4 உள்ளிட்ட பல்வேறு எதிர்கால விண்வெளி திட்டமான இந்திய விண்வெளி நிலையம் அமைப்பது போன்றவற்றிற்கும் வழிவகுக்கிறது.

செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு உகந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதன் மூலம் உலக நாடுகளின் நம்பகத்தன்மையை இந்தியா பெற்றுள்ளது. நாடு இதுவரை 433 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. அவற்றில் 396 செயற்கைக்கோள்கள் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 2014 -2023 காலகட்டத்தில் 157 மில்லியன் டாலர் மற்றும் 260 மில்லியன் யூரோ வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்திற்கு அருகில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதற்கு சந்திரயான்-3 திட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியானது நிலவு தொடர்பான ஆய்வில் இஸ்ரோவை முன்னணி நிறுவனமாக நிலைநிறுத்தியுள்ளது. நாசா உட்பட உலகின் முன்னணி விண்வெளி நிறுவனங்கள், தற்போது நிலவின் தென் துருவத்திலிருந்து இந்தியாவின் கண்டுபிடிப்புகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றன. இது விண்வெளி ஆராய்ச்சியில் நாட்டின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தை சுட்டிக் காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in