Published : 17 Feb 2025 06:32 AM
Last Updated : 17 Feb 2025 06:32 AM
திருவனந்தபுரம்: பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தால் இந்தியாவுக்கு சில விஷயங்களில் வெற்றி கிடைத்துள்ளது என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
‘‘நான் பாராட்டியது சரிதான். கட்சிக்காக மட்டும் எப்போதும் பேச முடியாது’’ என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி.சசிதரூர், அவ்வப்போது மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் பாராட்டி கருத்து வெளியிடுகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் இவர் மீது அதிருப்தியும் நிலவுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் அதிபர் ட்ரம்பை சந்தித்து பிரதமர் மோடி பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதையும் சசிதரூர் பாராட்டியிருந்தார். இதையும் காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்தனர். இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் சசிதரூர் கூறியதாவது: 4-வது தலைவர் எதிர்க்கட்சி என்றாலே மத்திய அரசு எது செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. கட்சிக்காக மட்டும் எப்போதும் பேச முடியாது. பிரதமர் மோடி - அதிபர் ட்ரம்ப் சந்திப்பை நான் பாராட்டியது சரிதான். இந்திய நலன் கருதிதான் பாராட்டினேன்.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் இந்தியர்களுக்கு சாதகமான சில நல்லவிஷயங்களை ஏற்படுத்தி உள்ளது. அதிபர் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அவரை சந்திக்கும் 4-வது தலைவர் பிரதமர் மோடி. இது உலக அளவில் இந்தியாவின் முக்கியத்துவத்தை எடுத்து காட்டுகிறது. அதேநேரம், மோடியின் அமெரிக்க பயணத்தில் சில கேள்விகளும் உள்ளன. குறிப்பாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக கூறி இந்தியர்கள் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதுகுறித்து அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி பேசினாரா என்பது தெரியவில்லை.
எனினும், இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகம், வரி உள்ளிட்ட விவகாரங்களில் அடுத்த 9 மாதங்களுக்கு பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்படுவதாக ஒப்புக்கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்திய ஏற்றுமதியை பாதிக்கும் வகையில் அமெரிக்கா தன்னிச்சையாக வரிகளை உயர்த்தி அறிவிப்பதை விட, இந்த கால அவகாசம் எவ்வளவோ மேல்.என்னை பொருத்தவரை, பிரதமரின் அமெரிக்க பயணத்தால் சில விஷயங்களில் இந்தியாவுக்கு வெற்றியே கிடைத்துள்ளது. ஒரு இந்தியனாக அதை பாராட்டுகிறேன். எப்போதும் கட்சிக்காகவே பேச முடியாது. நான் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் இல்லை. மத்திய அரசு செய்வது எல்லாமே தவறானது என்று எதிர்க்கட்சிகள் நினைப்பதும், எதிர்க்கட்சிகள் செய்வது எல்லாம் தவறு என்று மத்திய அரசு நினைப்பதும்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். ஜனநாயகத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போக வேண்டும். இவ்வாறு சசிதரூர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT