Published : 17 Feb 2025 06:13 AM
Last Updated : 17 Feb 2025 06:13 AM

ரயில்கள் குறித்த அறிவிப்பால் ஏற்பட்ட குழப்பம்: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் நடந்தது என்ன?

மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக சென்ற பக்தர்கள் டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதுவரை 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அந்த ஆன்மிக நிகழ்வில் கலந்து கொள்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமையன்று 13 மற்றும் 14-வது நடைமேடையில் ஆயிரக்கணக்கானோர் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது, ஒரே நேரத்தில் ஏராளமானோர் ரயிலில் ஏறி இடம்பிடிக்க முண்டியத்ததால் பலர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்த நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த ஆஷா தேவி (79), பிங்கி தேவி (41), ஷீலா தேவி (50), வியோம் (25), பூனம் தேவி (40), லலிதா தேவி (35), சுருஷி (11), கிருஷ்ணா தேவி (40), விஜய் ஷா (15), நீரஜ் (12), சாந்தி தேவி (40), பூஜா குமாரி (8), சங்கீதா மாலிக் (34), பூனம் (34), மம்தா ஜா (40), ரியா சிங் (7), பேபி குமாரி (24), மனோஜ் (47) ஆகியோரின் உடல்கள் உரிய விசாரணைக்குப் பிறகு அவர்களது உறவினர்களிடம் நேற்று காலை 9 மணியளவில் ஒப்படைக்கப்பட்டது. பல குடும்பங்கள் பிரேத பரிசோதனை செய்யாமல் உடலை பெற முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீஸார் கூறுகையில், “மகா கும்பமேளாவுக்கு செல்ல அதிக அளவில் பயணிகள் டெல்லி ரயில் நிலையத்தில் திரண்டனர். இதற்கேற்ப, கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பிரயாக்ராஜ் செல்லும் 4 ரயில்களில் 3 ரயில்கள் தாமதம் ஆனதால், கூட்டம் அதிகரித்தது. தவிர, 14-வது நடைமேடையில் பிரயாக்ராஜ் விரைவு ரயில் நின்றிருந்தது. அப்போது, 16-வது நடை மேடைக்கு பிரயாக்ராஜ் சிறப்பு ரயில் வந்தடைந்தது. இதுகுறித்த அறிவிப்பால் பயணிகள் குழப்பம் அடைந்து, ஒரே இடத்தில் குவிந்தனர். இதனால் நெரிசல் ஏற்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர். ரயில்வே சார்பில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க இரு உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு உடனடியாக விசாரணையை தொடங்கியது.

ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம், சிறிய காயம் ஏற்பட்டவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண தொகையை ரயில்வே அறிவித்துள்ளது.

குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: டெல்லி நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்​தேன். காயமடைந்தவர்கள் விரை​வில் குணமடைய பிரார்த்திக்​கிறேன்.

பிரதமர் மோடி: டெல்லி விபத்து மிகுந்த மனவேதனையை ஏற்படுத்​தி​யுள்​ளது. அன்புக்​குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்​தினருக்கு உறுதுணையாக இருப்​பேன்.

ராகுல் காந்தி கண்டனம்: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம், வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். இந்த சம்பவம் ரயில்வே துறையின் தோல்வியையைும், அரசின் அக்கறையின்மையையும் மீண்டும் ஒரு முறை எடுத்துக்காட்டுகிறது. பிரயாக்ராஜ் செல்ல ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என்று தெரிந்திருந்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் முன்கூட்டியே செய்யவில்லை. தவறான நிர்வாகம் மற்றும் அலட்சியத்தால் இதுபோன்று மீண்டுமொரு சம்பவம் நடக்காமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x