

கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பாக ரூ.1,646 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.
டிஜிட்டல் நாணயம் என்றழைக்கப்படும் கிரிப்டோகரன்சி அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் பிரபலமாக இருக்கிறது. இதை மையமாக வைத்து குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த சதீஷ் கும்பானி (38) கடந்த 2016-ம் ஆண்டில் பிட்கனெக்ட் என்ற பெயரில் கிரிப்டோகரன்சியை அறிமுகம் செய்தார்.
இதில் முதலீடு செய்தால் ஒரு மாதத்தில் 40 சதவீதம் வரை லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளரை இணைக்கும் நபர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று சதீஷ் கும்பானி அறிவித்தார். இதனால் உலகம் முழுவதும் பிட்கனெக்ட் பிரபலமானது. சுமார் 95 நாடுகளை சேர்ந்த 4,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் முதலீடு செய்தனர். ஒரு பிட்கனெட்டின் விலை சராசரியாக ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்டது. மிக குறுகிய காலத்தில் உலகின் மிகச் சிறந்த 20 கிரிப்டோகரன்சிகளில் ஒன்றாக பிட்கனெக்ட் உருவெடுத்தது.
இந்த சூழலில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரியில் பிட்கனெக்ட் மூடப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டு ஜனவரி 31-ம் தேதி அமெரிக்காவின் கன்டெக்கி நீதிமன்றத்தில் பல்வேறு வாடிக்கையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதன்பேரில் பிட்கனெக்ட் நிறுவனர் சதீஷ் கும்பானி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த 2022-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது சதீஷ் கும்பானிக்கு 70 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்கா தவிர பல்வேறு நாடுகளின் நீதிமன்றங்களிலும் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பிட்கனெக்ட் கிரிப்டோகரன்சி மூடப்பட்ட பிறகு சதீஷ் கும்பானி தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கிருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை. இந்த மோசடி தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் சதீஷ் கும்பானிக்கு சொந்தமான ரூ.489 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் அகமதாபாத்தில் உள்ள சதீஷ் கும்பானிக்கு சொந்தமான இடங்களில் கடந்த 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சோதனை நடத்தினர். அப்போது ரூ.1,646 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சி முடக்கப்பட்டது. ஒரு சொகுசு கார், கணினி, லேப்டாப் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பிட்கனெக்ட் கிரிப்டோகரன்சி பெயரில் உலகம் முழுவதும் சுமார் ரூ.22,500 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்று இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த மோசடி தொடர்பாக குஜராத்தில் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை ஏற்கெனவே முடக்கி உள்ளோம். தற்போது ரூ.1,646 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை முடக்கியிருக்கிறோம். பிட்கனெக்ட் நிறுவனர் சதீஷ் கும்பானி இந்தியாவில் இல்லை. அவர் ஏதோ ஒரு வெளிநாட்டில் பதுங்கியிருக்கிறார். அவரை இன்டர்போல் போலீஸார் அதிதீவிரமாக தேடி வருகின்றனர். இவ்வாறு அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.