Published : 17 Feb 2025 05:53 AM
Last Updated : 17 Feb 2025 05:53 AM
பாஸ்டேக் புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இனி தாமதமான பணம் செலுத்தலுக்கு பயனாளர் கூடுதல் அபராதம் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இணைந்து சுங்க சாவடி கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் வகையிலும், மோசடிகளை தடுத்து தகராறுகளை குறைக்கும் வகையிலும் பாஸ்டேக் பயன்படுத்துவதில் சில முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
அதன்படி, குறைந்த இருப்பு, தாமதமான பணம் செலுத்தல் அல்லது தடைசெய்யப்பட்ட டேக் வைத்துள்ள பயனர்களுக்கு இனி கூடுதல் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் (பிப். 17) அமலுக்கு வந்துள்ளது.
வாகனம் டோலைக் கடக்கும் முன்பாக 60 நிமிடங்களுக்கு மேல் பாஸ்டாக் செயலிழந்திருந்தாலோ, கடந்து சென்ற பிறகு 10 நிமிடங்கள் வரை செயலற்ற நிலையில் இருந்தாலோ அந்த பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். இதற்கான பிழைக் குறியீடு 176 (error code 176) ஆக இருக்கும். இது, இன்று முதல் அமலாகிறது.
புதிய வழிகாட்டுதல் விதிகளின்படி, டோல் ரீடரை கடந்து செல்லும் நேரத்திலிருந்து 15 நிமிடங்களுக்கு மேல் சுங்கவரி பரிவர்த்தனையின் செயலாக்கம் நடைபெற்றால் பாஸ்டேக் பயனாளர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம்.
புதுப்பிக்கப்பட்ட நேஷனல் எலக்ட்ரானிக் டோல் கலெக்சன் (NETC) வழிகாட்டுதல்களின்படி, ஒரு பரிவர்த்தனை தாமதமாகி, பயனரின் பாஸ்டேக் கணக்கில் போதுமான இருப்பு இல்லை என்றால் அதற்கு இனி டோல் ஆப்பரேட்டரே பொறுப்பாவார்.
பயணத்திற்கு முன் பாஸ்டேக் வாலெட்டில் போதுமான இருப்பையும், பரிவர்த்தனை செயல்பாட்டையும் பயனாளர்கள் உறுதி செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்பு பயனர்கள் தங்களது பாஸ்டேக்கை டோல் கேட்டில் ரீசார்ஜ் செய்து அதனை கடந்து செல்லும் வசதி இருந்தது. ஆனால், தற்போது புதிய அமலாகியுள்ள விதிமுறையில் பயனர்கள் தங்களது பாஸ்டேக் நிலையை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
என்பிசிஐ புள்ளிவிவரங்களின்படி, பாஸ்டேக் பரிவர்த்தனை கடந்தாண்டு நவம்பரில் 359 மில்லியனாக இருந்த நிலையில் டிசம்பரில் 6 சதவீதம் அதிகரித்து 382 மில்லியனை எட்டியது. மதிப்பின் அடிப்படையில் இது ரூ.6,070 கோடியிலிருந்து 9 சதவீதம் உயர்ந்து ரூ.6,642 கோடியானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT