

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி புத்தக நிலையங்களில் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 1953-ம் ஆண்டில் ஜமாத் இ இஸ்லாமி காஷ்மீர் அமைப்பு தொடங்கப்பட்டது. பல்வேறு தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே மத்திய உளவுத் துறை சமர்ப்பித்த ரகசிய அறிக்கையில், “தடை செய்யப்பட்ட ஜமாத் இ இஸ்லாமி அமைப்பை ஆதரிக்கும் வகையில் காஷ்மீரில் பல்வேறு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன்மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரிவினைவாத சிந்தனை தூண்டப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.
உளவுத் துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் போலீஸார் கடந்த சில நாட்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் செயல்படும் புத்தக நிலையங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஜமாத் இ இஸ்லாமி நிறுவனர் அப்துல் அலா மவுதுதி எழுதிய புத்தகங்கள் உட்பட பல்வேறு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸார் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “உளவுத் துறை எச்சரிக்கையின் அடிப்படையில் ஸ்ரீநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள புத்தக நிலையங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவான கருத்துகளை கொண்டிருந்த 668 புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புத்தக நிலையங்களில் சோதனை நடத்தப்படுவதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவர் மிர்வைஸ் உமர் பரூக் கூறும்போது, “புத்தக நிலையங்களில் சோதனை நடத்தி புத்தகங்களை பறிமுதல் செய்வது கேலிக்கூத்தாக இருக்கிறது. இஸ்லாமிய இலக்கியங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “காஷ்மீரில் புத்தகம் படிப்பதற்குகூட சுதந்திரம் கிடையாதா, நாங்கள் என்ன ஆட்டு மந்தை கூட்டமா" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
காஷ்மீரில் தற்போது முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாடு கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. புத்தக நிலைய சோதனை தொடர்பாக அவரது அரசுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.