‘கும்பமேளாவே அர்த்தமற்றது..’ - டெல்லி கூட்ட நெரிசல் குறித்த லாலுவின் கருத்தால் சர்ச்சை

லாலு பிரசாத் | கோப்புப்படம்
லாலு பிரசாத் | கோப்புப்படம்
Updated on
1 min read

பாட்னா: கும்பமேளாவே அர்த்தமற்றது என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ள லாலு பிரசாத் யாதவ், டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்த சம்பவத்துக்காக ரயில்வே துறையைச் சாடியுள்ளார். மேலும் டெல்லி சம்பவத்துக்காக மத்திய பாஜகவை குற்றஞ்சாட்டியுள்ள லாலு, ரயில்வே அமைச்சர் பதவிவிலக வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

டெல்லி சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ரயில்வே துறை அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் நிறுவனருமான லாலு பிரசாத், “கூட்ட நெரிசல் சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு போதிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. இந்தக் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும். இது ரயில்வே துறையின் முழு தோல்வியாகும்." என்று தெரிவித்துள்ளார்.

பிரயாக்ராஜில் நடைபெறும் மத விழாவுக்கு மக்கள் அதிக அளவில் செல்வது குறித்த கேள்விக்கு பதில் அளித்த லாலு, “கும்பமேளாவே அர்த்தமற்றது.” என்று தெரிவித்தார்.

லாலுவின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள பிஹார் பாஜக செய்தித் தொடர்பாளர் மனோஜ் ஷர்மா, “தனது சமாதானப்படுத்தும் அரசியலுக்காக லாலு பிரசாத் இவ்வாறு பேசி வருகிறார். ஆர்ஜேடி தலைவர்கள் எப்போதும் இந்துமத உணர்வுகளை அவமதித்தே வருகின்றனர். மகா கும்பமேளாவை அர்த்தமற்றது எனச் சொல்லும் லாலு பிரசாத்தின் சமீபத்திய இந்தப் பேச்சு இந்து மதத்தினைப் பற்றிய கட்சியின் மனநிலையை வெளிப்படுத்துகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

18 பேர் பலி: முன்னதாக, பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்க புதுடெல்லி ரயில் நிலையத்தில், சனிக்கிழமை இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் புதுடெல்லி ரயில் நிலையத்தின் நடைமேடை 13 மற்றும் 14-ல் நடந்தது. நடைமேடையில் திடீரென ஏற்பட்ட கூட்டம் காரணமாக சில பயணிகள் மயக்கம் அடைந்தனர். இது கூட்ட நெரிசல் போன்ற வதந்தி போன்ற சூழல் பரவ வழிவகுத்தது என்பதை உறுதிப்படுத்திய ரயில்வேதுறை, “இது பீதியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. பின்னர் நெரிசல் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவிலான கூட்ட நெரிசலைத் தொடர்ந்து வடக்கு ரயில்வே நான்கு சிறப்பு ரயில்களை அனுப்பியது. சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in