

லக்னோ: உத்தரபிதேச மாநிலம் மெயின்புரியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த ஆண்டு மே 18-ம் தேதி பயிற்சி மையத்துக்கு செல்லும் வழியில் அவருக்கு அறிமுகமான நீரஜ் என்பவரால் காரில் கடத்திச் செல்லப்பட்டார். அடுத்த 8 மாதங்களுக்கு அச்சிறுமி கடும் துயர வாழ்க்கையை அனுபவிக்க நேரிட்டது. அவர் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை அடையும் வரை பல ஊர்களுக்கு கடத்தப்பட்டு, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும் அடுத்தடுத்து விற்பனை செய்யப்பட்டும் வந்தார். அஜ்மீரில் ஆஷா என்பவரின் கைக்கு அச்சிறுமி வந்து சேர்ந்த நிலையில், அவர் சிறுமியை விஷ்ணு மாலி என்பருக்கு மூன்றரை லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தார். மேலும் மாலியை திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தினார்.
இந்நிலையில் நீண்ட தேடலுக்கு பிறகு திருமணம் கைகூடிவந்த மகிழ்ச்சியில் விஷ்ணு மாலி அந்த சிறுமியுடன் எடுத்துக் கொண்ட தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டார். ஆனால் இது அச்சிறுமியின் துயரம் முடிவுக்கு வருவதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.
மெயின்புரியில் சிறுமியை ஒருவர் அடையாளம் கண்டதை தொடர்ந்து உ.பி. போலீஸார் அஜ்மீர் சென்று விஷ்ணு மாலியை தங்கள் பிடியில் கொண்டு வந்தனர். சிறுமியை மெயின்புரிக்கு அழைத்து வந்தனர்.
அவர் அளித்த தகவலின் பேரில் அவரை முதலில் கடத்திய நீரஜை கைது செய்தனர். அவர் மீது பிஎன்எஸ் மற்றும் போஸ்கோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.