

ஜம்மு: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த காவலர், ஆசிரியர் உட்பட 3 அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், சமீப காலமாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் பாதுகாப்பு தொடர்பான மறுஆய்வு கூட்டம் கடந்த 13-ம் தேதி நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தீவிரவாதத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சின்ஹா உத்தரவிட்டார். மேலும், தீவிரவாதிகளின் கட்டமைப்பை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனவும் தீவிரவாதிகளுக்கு நிதி மற்றும் போக்குவரத்து உதவி செய்வதைத் தடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் தனி நபர்கள் மற்றும் குழுக்களை தீவிரவாத செயலாக கருதி, சட்டப்படி அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட காவலர் பிர்டஸ் அகமது பட், மாவட்ட சிறையில் உள்ள ஆசிரியர் முகமது அஷ்ரப் பட், வனத்துறை அலுவலகத்தில் ஆர்டர்லியாக பணிபுரியும் நிசார் அகமது கான் ஆகிய 3 அரசு ஊழியர்கள் நேற்று பணநீக்கம் செய்யப்பட்டனர்.
இதில் பிர்டஸ் மற்றும் அஷ்ரப் பட் ஆகிய இருவரும் லஸ்கர்-இ-தொய்பா அமைப்பின் சார்பில் பணியாற்றியதாகவும் நிசார் அகமது ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புக்கு உதவியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.