“ஜம்மு காஷ்மீர் இனி மோதலின்றி நம்பிக்கையின் இடமாக இருக்கும்” - ஜக்தீப் தன்கர்

“ஜம்மு காஷ்மீர் இனி மோதலின்றி நம்பிக்கையின் இடமாக இருக்கும்” - ஜக்தீப் தன்கர்
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் வலுவடைந்துள்ளதால், இப்பகுதி இனி மோதலின் இடமாக இல்லாமல் நம்பிக்கையின் இடமாக இருக்கும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய ஜக்தீப் தன்கர், "இரண்டே ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரூ.65,000 கோடி மதிப்பிலான முதலீட்டு முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது. இப்பகுதி நம்பிக்கை, மூலதனம் ஆகியவற்றின் சங்கமமாக உள்ளது. அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ஒரு தற்காலிக ஏற்பாடு. அதை உருவாக்க டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மறுத்துவிட்டார். 2019-ம் ஆண்டில், இந்த புனித நிலத்தில் ஒரு புதிய பயணம் தொடங்கியது. தனிமைப்படுத்தலில் இருந்து ஒருங்கிணைப்பை நோக்கிய பயணம் அது.

2023-ம் ஆண்டில், 2 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தந்துள்ளனர். இது உள்ளூர் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. மாற்றத்தின் காற்று அமைதியையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் 35 ஆண்டுகளில் இல்லாத அதிக வாக்குப்பதிவு நடந்துள்ளதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் வலுவடைந்துள்ளது. இப்பகுதி இனி மோதலின் இடமாக இல்லாமல் நம்பிக்கையின் இடமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச முதல்வர் உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச கல்வி அமைச்சர் சகீனா மசூத் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in