“எங்களுக்கு ஜனநாயகம் உள்ளது” - மையிட்ட விரலைக் காட்டி ஜெய்சங்கர் பேச்சு @ முனிச்

“எங்களுக்கு ஜனநாயகம் உள்ளது” - மையிட்ட விரலைக் காட்டி ஜெய்சங்கர் பேச்சு @ முனிச்
Updated on
2 min read

புதுடெல்லி: “உலக ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது” என்ற மேற்கத்திய பார்வையில் இருந்து மாறுபட்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துக்கு தனது மையிட்ட ஆள்காட்டி விரலைக் காட்டி, ‘எங்களுக்கு ஜனநாயகம் வழங்கப்படுகிறது’ என்றார்.

அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர், நார்வே பிரதமர், வார்சா மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட குழு விவாதத்தில் வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, உலக அளவில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்ற மேற்கத்திய பார்வையில் இருந்து மாறுபட்டு, "இந்தியா ஒரு ஜனநாயக சமூகம்." என்றார்.

விவாதத்தின் போது மேற்கத்திய ஜனநாயகம் குறித்து கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெய்சங்கர், "ஒப்பீட்டு அளவில் அவநம்பிக்கையாளர்கள் இருக்கும் இக்குழுவில் எனக்கு இடம் இல்லையென்றாலும், ஒரு நம்பிக்கையாளனாக இங்கு நான் உள்ளேன். என்னுடைய விரலை உயர்த்திக் காட்டுவதில் இருந்து தொடங்கலாம் என நினைக்கிறேன். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அது என்னுடைய ஆட்காட்டி விரல்.

அதில் என்னுடைய நகத்தில் நீங்கள் பார்க்கும் மை குறி தேர்தலில் வாக்களித்ததன் அடையாளம். என்னுடைய மாநிலத்தில் (டெல்லி) சமீபத்தில் தேர்தல் நடந்தது. கடந்த ஆண்டு எங்களுடைய நாட்டில் தேசிய அளவில் தேர்தல் நடந்தது. இந்திய தேர்தல்களில், தோராயமாக தகுதியுள்ள வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் வாக்களிக்கின்றனர். தேசிய அளவில் தேர்தலில் சுமார் 90 கோடி வாக்காளர்களில் 70 கோடி பேர் வாக்களித்தனர். அனைத்து வாக்குகளையும் ஒரே நாளில் எண்ணுகிறோம்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது யாரும் அதனை எதிர்ப்பதில்லை. நாங்கள் சிறப்பாக வாக்களிக்கிறோம், எங்களின் ஜனநாயகத்தின் திசை குறித்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். நாம் வாக்களிக்கத் தொடங்கிய நாளில் இருந்து தற்போதைய நவீன யுகம் வரை துவக்கத்தில் இருந்ததை விட 20 சதவீதம் அதிக மக்கள் வாக்களிக்கின்றனர். எனவே எனது முதல் செய்தி என்னவென்றால், உலக அளவில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என நீங்கள் கூறுகிறீர்கள். மன்னித்துவிடுங்கள். நான் இதிலிருந்து மாறுபடுகிறேன்.

ஜனநாயகம் உங்கள் மேஜைக்கு உணவினைக் கொண்டுவராது என்று அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கூறினார். உண்மையில் எங்கள் பகுதியில் அது நடந்துள்ளது. இன்று நாங்கள் ஜனநாயக சமூகமாக இருப்பதால், நாங்கள் 80 கோடி மக்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவினையும், உணவினையும் வழங்குகிறோம். அது அவர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார்கள், அவர்களின் வயிறு எவ்வளவு நிரம்பியுள்ளது. என்பதைப் பொறுத்தது.

இதன்மூலம் நான் சொல்ல விரும்புவது உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு உரையாடல்கள் நிகழ்கின்றன. அவற்றை ஓர் உலகளாவிய போக்கு எனக் கருத வேண்டாம். அது அப்படியில்லை. ஜனநாயகம் நன்றாக வேலை செய்யும் இடங்களும் உள்ளன. ஒருவேளை அது இல்லாத பகுதிகளும் இருக்கலாம். அது ஏன் இல்லை என்று அங்குள்ள மக்கள் நேர்மையான முறையில் விவாதிக்க வேண்டும்.

ஒருவர் இதனை உணர்ச்சிவசப்படாமல் அணுகுவார் என்றால், இப்போது பேசும் சிக்கலில் பெரும்பாலானவை கடந்த 25 - 30 ஆண்டுகளில் நாம் பின்பற்றி வரும் உலகமயமாதல் மாதிரியால் உண்டான பிரச்சினையாக இருக்கும் என நான் வாதிடுவேன். ஆமாம் பிரச்சினைகள் உள்ளன. ஆனால் நமது பார்வைகளின் மூலம் அதனை நாம் பொதுமைப்படுத்த வேண்டாம்.” இவ்வாறு அமைச்சர் பேசினார்.

In conversation with PM @jonasgahrstore, @ElissaSlotkin and @trzaskowski_ on the topic ‘Live to Vote Another Day: Fortifying Democratic Resilience’ at #MSC2025.

https://t.co/IQqJ6XY6f3

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in