Published : 03 Jul 2018 08:14 AM
Last Updated : 03 Jul 2018 08:14 AM

குழந்தை கடத்தியதாக 5 பேர் கொலை: மகாராஷ்டிராவில் 23 பேர் கைது

குழந்தையைக் கடத்த முயன்றதாக பொதுமக்கள் தாக்கியதில் 5 பேர் இறந்த வழக்கில் 23 பேரை மகாராஷ்டிரா மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் துலே பகுதியிலுள்ள ரெயின்படா கிராமத்தில் நேற்று முன்தினம் ஒரு கும்பல் அரசுப் பேருந்திலிருந்து இறங்கி உள்ளது. அவர்களில் ஒருவர் ஒரு பெண் குழந்தையுடன் பேச முயன்றுள்ளார். இதையடுத்து, குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர்களை கிராம மக்கள் தாக்கி உள்ளனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோலாப்பூர் மாவட்டம் காவே கிராமத்தைச் சேர்ந்த பரத் சங்கர் போசலே(45), அவருடைய சகோதரர் தாதாராவ் சங்கர் போசலே, ராஜு போசலே, பரத் மால்வே உள்ளிட்ட 5 பேர் கொலை செய்யப்பட்டவர்கள்.

இவர்கள் பிச்சை எடுத்து வாழ்க்கையை நடத்தி வருபவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கொல்லப்பட்ட 5 பேரின் உடல்களை வாங்க அவர்களது உறவினர்கள் மறுத்துவிட்டனர். மேலும் அவர்களைக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

பொதுமக்கள் தாக்கியதில் இறந்த தாதாராவ் சங்கர் போசலேவின் மகன் சந்தோஷ் போசலே இதுகுறித்து கூறும்போது, “இப்படிப்பட்ட மூர்க்கத்தனமான சம்பவம் நடந்தும் இதுவரை எந்த ஒரு அரசு அதிகாரியும் எங்களை வந்து சந்திக்கவில்லை. எங்களுக்கு நீதி தேவை. இறந்தவர்களின் குடும்பத்துக்கு நஷ்டஈட்டை அரசு வழங்கவேண்டும்” என்றார்

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் தீபக் கேசர்கர் கூறும்போது, “குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ்-அப்பில் வரும் செய்திகளை யாரும் நம்பவேண்டாம். யாரும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டாம். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதா மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x