Published : 14 Feb 2025 12:57 PM
Last Updated : 14 Feb 2025 12:57 PM

உக்ரைன் போர் விவகாரம்: ட்ரம்ப் சந்திப்பின்போது இந்திய நிலைப்பாடு குறித்து மோடி சூசகம்

வாஷிங்டன்: ரஷ்யா உக்ரைன் போரினை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் மோடி, ‘இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது.’ என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி உக்ரைன் - ரஷ்யா போர் பற்றி, “இந்தியா நடுநிலையுடன் இல்லை. இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது. இது போருக்கான காலம் இல்லை என்று நான் ஏற்கெனவே புதினிடம் தெரிவித்திருக்கிறேன். போரினை நிறுத்த அதிபர் ட்ரம்ப் எடுக்கும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.” என்றார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலனஸ்கியுடன் தனித்தனியாக தொலைப்பேசி வழி உரையாடிய ஒரு நாள் கழித்து பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சு உக்ரைன் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது அவர்கள் பேச்சுவார்த்தையில் உக்ரைனும் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற பின்பு ரஷ்ய அதிபர் புதினுடன் முதல் முறையாக அதிகாரபூர்வமாக பேசிய ட்ரம்ப், புதினுடன் ஒரு ஆக்கபூர்வமான உரையாடல் நடத்தியதாகத் தெரிவித்திருந்தார். இதனிடையே, பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக உக்ரைன் இருக்கும் என்றும் புதின் சமாதானத்தை விரும்புகிறார் என்று தான் நம்புகிறேன் என வலியுறுத்தினார்.

முன்னதாக பிரதமர் மோடியும் இந்தியாவும் இது போர் செய்வதற்கான காலம் இல்லை மாறாக “பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்துக்கான நேரம்” என்று அழுத்தம் கொடுத்திருந்தது. கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் - ரஷ்யா இடையே மோதல் தொடங்கியதில் இருந்து ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் தனித்தனியாக பல முறை பேசியுள்ளார். கடந்த ஆண்டு இரண்டு தலைவர்களையும் தனித்தனியாக மோடி சந்தித்துள்ளார்.

பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது நெருங்கிய உதவியாளர் மற்றும் பணக்கார தொழிலதிபர் எலான் மஸ்கைச் சந்தித்தார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவகத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற ட்ரம்ப், “மோடி என்னுடைய சிறந்த நண்பர், நீண்ட காலமாக எங்களுக்குள் நல்ல உறவு உள்ளது.” என்றார்.

இந்தியா உட்பட பல நாடுகளின் பொருட்களுக்கு ட்ரம்ப் புதிய வரிகள் விதித்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின்பு அவரைச் சந்திக்கும் நான்காவது சர்வதேச தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. முன்பாக இஸ்ரேல் மற்றும் ஜப்பான் பிரதமர்கள், ஜோர்டான் மன்னர் ஆகியோர் சந்தித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x