

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு அக்டோபர் - நவம்பரில் தேர்தல் எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து பாஜக பிஹாரை குறிவைத்துள்ளது.
இந்நிலையில் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு அளித்த பதிலில், “டெல்லியில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் அது பிஹாரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பிஹாரில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என பாஜக கூட்டணி தலைவர்கள் கூறலாம். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. நாங்கள் பிஹாரில் இருக்கும் வரை அவர்களால் இங்கு அரசு அமைக்க முடியாது" என்றார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹா கூறுகையில், "லாலு பிஹாரில் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம், ஆனால் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி" என்றார்.
ஐக்கிய ஜனதா தளம் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் கூறுகையில், “லாலு பிஹாரில் இருக்கும்போதுதான் என்டிஏ ஆட்சியை பிடித்தது என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.