Published : 14 Feb 2025 07:25 AM
Last Updated : 14 Feb 2025 07:25 AM

இந்தியர்களை திருப்பி அனுப்பிய விவகாரம்: ட்ரம்ப்பிடம் பேச்சுவார்த்தை நடத்துவாரா பிரதமர் மோடி - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

புதுடெல்லி: பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அவர் அதிபர் டிரம்ப்பை இன்று காலை சந்தித்து பேசுகிறார். இந்நிலையில் அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, பிரதமர் மோடி இன்று அதிகாலை சந்தித்து பேசுகிறார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில வேளாண் பொருட்கள், அதிபர் டிரம்ப்புக்கு பிடித்தமான ஹார்லே-டேவிட்சன் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை இந்தியா குறைத்து, அதிபர் டிரம்பை ஏற்கெனவே கவர்ந்துள்ளது.

இந்நிலையில் அதிபர் டிரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை தாயகம் அழைத்துவர சொந்த விமானத்தை அனுப்புவது குறித்து பேசுவாரா? இந்தியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் கை, கால்களில் விலங்கிட்டு திருப்பி அனுப்பப்பட்டதற்கு இந்தியாவின் ஒட்டு மொத்த கோபத்தை அதிப்ர் ட்ரம்பிடம் தெரிவிக்கும் தைரியம் பிரதமருக்கு உள்ளதா?

காசாவை கைப்பற்றும் திட்டம் குறித்து பேசிய அதிபர் டிரம்ப்பிடம், பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்ட கால நிலைப்பாட்டை பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும். பருவநிலை மாற்றத்துக்கான பாரீஸ் ஒப்பந்தம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றில் இருந்து அமெரிக்கா வெளியேறியது, பொறுப்பிலிருந்து விலகுவதற்கு சமம் என அதிபர் டிரம்பிடம் , மோடி கூற வேண்டும்.

எச்1பி விசாவில் அமெரிக்கா சென்றவர்கள் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்திய இளைஞர்கள். இவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என டிரம்பிடம், மோடி கூறவாரா?

தொழிலபதிபர் எலான் மஸ்க்கையும், பிரதமர் மோடி சந்தித்து பேசவார். அப்போது இந்தியாவில் டெஸ்லா காரை தயாரிக்க வேண்டும், பாகங்களை கொண்டு வந்து இணைக்கக் கூடாது என பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x