Published : 13 Feb 2025 05:37 AM
Last Updated : 13 Feb 2025 05:37 AM
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரியாக இருந்தவர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றி இருந்தது. லக்னோ சஞ்சய் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.00 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 87.
கடந்த 1976-ம் ஆண்டு அயோத்தி சம்ஸ்கிருத மகா வித்யாலயாவில் உதவி ஆசிரியராக சேர்ந்தார். ராமரின் தீவிர பக்தரான சத்யேந்திர தாஸ், ராமர் கோயிலுக்கான கரசேவையிலும் பங்கேற்றார். கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது உள்ளே வைக்கப்பட்டு இருந்த குழந்தை ராமர் சிலைக்கு அருகில் இருந்தார். சிலை சேதம் அடையாமல் தனது மடியில் வைத்து பத்திரமாகப் பாதுகாத்தார்.
பிறகு இடிந்த இடத்தில் கூடாரம் அமைத்து ராமர் சிலையை அமைத்ததிலும் ஆச்சார்யா சத்யேந்திர தாஸின் முக்கிய பங்கு இருந்துள்ளது. அயோத்தியில் இந்த தற்காலிக கோயில் மீது கடந்த 2005-ம் ஆண்டு ஜுலை 5-ம் தேதி தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. அப்போதும், ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ராமர் சிலையை பத்திரமாக பாதுகாத்துள்ளார்.
கூடாரத்தில் அமைந்த கோயிலில் அன்றாட பூஜை செய்ய ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், தேர்வானார். அப்போது, ரூ.100 மட்டுமே ஊதியம் போதும் என கூறி பணியை ஏற்றார். இதற்காக அவர் தனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து விட்டார். அதன்பின் சுமார் 27 ஆண்டுகள் அவருக்கு ரூ.100 மட்டுமே மாத ஊதியமாக வழங்கப்பட்டது.
ராமர் கோயில் கட்டப்பட்டு 2024 ஜனவரியில் திறக்கப்பட்ட போது தலைமை பூசாரியாக ஆச்சார்யா சத்யேந்திர தாஸே நியமிக்கப்பட்டார். மகி பூர்ணிமா தினமான நேற்று காலமான ஆச்சார்யா சத்யேந்திரருக்கு உ.பி. முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். இவரது உடலுக்கு இன்று இறுதிச் சடங்குகள் சரயு நதிக்கரையில் செய்யப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT