Published : 12 Feb 2025 06:41 PM
Last Updated : 12 Feb 2025 06:41 PM
பாரிஸ்: பிரதமர் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானும் நடத்திய இரு தரப்பு பேச்சுவார்த்தையை அடுத்து, தகவல் தொழில்நுட்பம், சிவில் அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானும் தனிப்பட்ட நல்லுறவைப் பிரதிபலிக்கும் வகையில், நேற்று பாரிஸிலிருந்து மர்சேயிலுக்கு பிரான்ஸ் அதிபர் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தனர். இரு தரப்பு உறவுகளின் முழு பரிமாணங்கள் மற்றும் முக்கிய உலகளாவிய, பிராந்திய பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். மர்சேயில் வந்து இறங்கிய பின்னர் தூதுக்குழு நிலை பேச்சுவார்த்தைகள் நடந்தன. கடந்த 25 ஆண்டுகளில் பன்முக உறவாக சீராக உருவாகியுள்ள இந்தியா - பிரான்ஸ் கூட்டாண்மைக்கான தங்கள் வலுவான உறுதிப்பாட்டை தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இந்தியா - பிரான்ஸ் கூட்டாண்மையின் அனைத்து அம்சங்களையும் இந்தப் பேச்சுவார்த்தைகள் உள்ளடக்கியிருந்தன. பாதுகாப்பு, சிவில் அணுசக்தி, விண்வெளி ஆகிய முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். தொழில்நுட்பம் மற்றும் புதுமைத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளையும் அவர்கள் விவாதித்தனர்.
சமீபத்தில் முடிவடைந்த செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சிமாநாடு மற்றும் வரும் 2026-ம் ஆண்டு இந்தியா - பிரான்ஸ் புத்தாக்க ஆண்டாக இருப்பதை முன்னிட்டு, இந்தக் கூட்டாண்மையானது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தவும் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். மேலும் இது தொடர்பாக 14வது இந்தியா - பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தின் அறிக்கையையும் வரவேற்றனர்.
சுகாதாரம், கலாச்சாரம், சுற்றுலா, கல்வி மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகள் ஆகிய துறைகளில் இருக்கும் ஒத்துழைப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் மெக்ரானும் திருப்தி தெரிவித்தனர். இந்தோ - பசிபிக் மற்றும் உலகளாவிய மன்றங்கள் மற்றும் முன்முயற்சிகளில் ஈடுபாட்டை மேலும் ஆழப்படுத்த அவர்கள் உறுதியளித்தனர்.
தொழில்நுட்பம் மற்றும் புதுமை, சிவில் அணுசக்தி, சுற்றுச்சூழல், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகள் ஆகிய துறைகளில் பத்து முடிவுகள் இறுதி செய்யப்பட்டன. மர்சேய் அருகே உள்ள கடலோர நகரமான காசிஸில் பிரதமரைக் கவுரவிக்கும் வகையில் அதிபர் மெக்ரான் இரவு விருந்து வழங்கினார். அதிபர் மெக்ரானை இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் அழைத்தார். இதனையடுத்து, பிரதமர் மோடி, பிரான்சில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். அவரை, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், விமான நிலையத்துக்கே வந்து வழி அனுப்பிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT