Published : 12 Feb 2025 05:36 PM
Last Updated : 12 Feb 2025 05:36 PM

1984 கலவரம்: கொலை வழக்கில் காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் குற்றவாளி என டெல்லி கோர்ட் தீர்ப்பு

புதுடெல்லி: 1984-ம் ஆண்டு டெல்லியில் நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரை கொலை செய்த வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்பி சஜ்ஜன் குமார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதமராக இருந்த இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் கடந்த 1984-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை சுட்டுக் கொன்றவர்கள் சீக்கியர்கள் என்பதால், அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது, சரஸ்வதி விஹார் பகுதியில், நவம்பர் 1, 1984 அன்று ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களின் வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு, பின்னர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.

இது தொடர்பாக ஜஸ்வந்த் சிங்கின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், பஞ்சாபி பாக் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்தது. பின்னர், சிறப்பு புலனாய்வுக் குழு இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சஜ்ஜன் குமாருக்கு எதிராக முகாந்திரம் இருப்பதாக டிசம்பர் 16, 2021 அன்று நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, இரட்டை கொலை வழக்கில் சஜ்ஜன் குமார் குற்றவாளி என தீர்ப்பளித்தார். மேலும், அவர், "அவர் ஒரு பங்கேற்பாளர் மட்டுமல்ல, கும்பலுக்கு தலைமை தாங்கியவர்" என்பதற்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இதை முன்னிட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஜ்ஜன் குமார், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தண்டனை விவரங்களை பிப்ரவரி 18 அன்று வெளியிடுவதாக நீதிபதி அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x