Published : 12 Feb 2025 05:43 AM
Last Updated : 12 Feb 2025 05:43 AM
டிஜிட்டல் கைது என்ற பெயரில் நொய்டாவைச் சேர்ந்த குடும்பத்திடம் ரூ.1 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கைது என்ற பெயரில் முதியோர்களுக்கு வீடியோ கால் செய்து அதில் போலி போலீஸ் அதிகாரி மிரட்டி பணம் பறிக்கும் மோசடி நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. டிஜிட்டல் கைது என்ற முறையே நமது சட்டத்தில் இல்லை. இந்த மோசடி குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் ஏற்கெனவே கூறியுள்ளார். ஆனாலும், இந்த மோசடி தொடர்ந்து நடைபெறுகிறது.
டெல்லி அருகேயுள்ள நொய்டாவைச் சேர்ந்த சந்திராபன் பாலிவல் என்பவரிடம் ஒரு கும்பல் ரூ. கோடியே 10 லட்சம் மோசடி செய்துள்ளது. இது குறித்து போலீஸார் கூறியதாவது: சந்திராபான் பாலிவல் என்பவருக்கு தெரியாத எண் ஒன்றிலிருந்து போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் மும்பை சைபர் குற்றப்பிரிவில் உங்கள் மீது வழக்கு உள்ளதாக கூறி, உங்கள் சிம் முடக்கப்படவுள்ளது. இது தொடர்பாக டிராய் அதிகாரியிடம் பேசவும் என கூறியுள்ளார். சிறிது நேரத்தில் போலி ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் வீடியோ அழைப்பில் தோன்றி, மும்பை கொலாவா காவல் நிலையத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். பாலிவல் நிதி மோசடியில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டி, அவர் மீது நாட்டின் பல இடங்களில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மிரட்டியுள்ளார். இந்த நிதி மோசடி வழக்கை சிபிஐ விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து பாலிவல் மனைவி மற்றும் மகள் ஆகியோரும் வீடியோ அழைப்புக்குப்பின் டிஜிட்டல் கைது செய்யப்பட்டிருப்பதாக பாலிவலிடம் கூறியுள்ளனர். ரூ.1 கோடி 10 லட்சம் அபராதம் செலுத்தவில்லை என்றால், பாலிவல் குடும்பத்தினர் அனைவரும் கைது செய்யப்படுவர் என போலி போலீஸ் அதிகாரி மிரட்டியுள்ளார். இதனால் அவர் 5 நாளில் ரூ.1 கோடியே 10 லட்சத்தை மோசடி கும்பலுக்கு செலுத்தியுள்ளார். இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT